அர்ச்சுனா! உணவும் எல்லோருக்கும் தத்தம் இயல்புக்கு ஏற்றவாறு மூன்று வகைகளில் பிரித்ததாக உள்ளது.

அவ்வாறே, யாகமும், தவமும், தானமும் மூன்று வகைப்படும், அவற்றின் தனித்தன்மை கொண்ட இந்த வேறுபாட்டை சொல்கிறேன் நீ கேட்டு தெரிந்து கொள் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! உணவைப் பற்றிக் கேட்காவிட்டாலும், கிருஷ்ணனே சொல்கிறார். மனிதன் எவ்வகை உணவு உண்கிறானோ அதற்கேற்றபடி அவன் உள்ளப் பாங்கு அமையும். உள்ளத்திற்குத் தக்கபடி சிரத்தை அமையும். உணவு சுத்தமாக இருந்தால் தான் உள்ளப் பாங்கு சுத்தமாக இருக்கும் என்கிறார்.

உள்ளம் சுத்தமாக இருந்தால் தான் எண்ணங்கள், மனப்பாங்கு, சிரத்தை முதலிய குணங்களும், செயல்களும் சுத்தமாக அமையும் அதனால்தான் இங்கு உணவைப் பற்றிக் கூறுவது அவசியம் ஆகிறது.

எல்லோரும் பூசை, யாகம் செய்வதில்லை. ஆனால், எல்லோருமே உணவு உண்கிறார்கள். உணவு உண்ணும் விதத்தில் மூன்று வகை உண்டு அவற்றில் இருந்து அவர்களை தெரிந்து கொள்ளலாம்.

சாத்விக, ராஜச, தாமச குணம் போல சாத்விக உணவுகளை ஏற்க வேண்டும். ராஜச, தாமச உணவுகளை விலக்க வேண்டும்.

யாகம், தானம், தவம் ஆகிய விசயங்களிலும் உண்ணும் உணவு மாறுபாடுகளை உண்டாக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

ஆயுள், அறிவு,வலிமை, உடல் நலம், இன்பம், அன்பு இவற்றை வளர்க்கின்றவையாகவும், ரசம், நெய் உடையவையாகவும் இயல்பாகவே மனதிற்குப் பிடித்தவையாகவும் இருக்கக்கூடிய உணவு வகைகள் சத்வ குணமுடைய உணவுகள் ஆகும்.

அதாவது, ஆயுள் என்றால் வயது. வயதை நீட்டி வாழ்ந்தல்.

சத்துவம் என்றால் அறிவு. அறிவு மாசற்றதாகவும், கூர்மையாகவும், உண்மையாகவும், நுணுக்கமாகவும் அறிவை வளர்த்தல்.

பலம் என்றால் நல்ல செயல்களை நல்லபடி ஆற்றி, அவை பயனளிக்க வகை செய்யும் மன ஆற்றலும், உடல் ஆற்றலும், உட்புற வலிமையும், புறவலிமையும் ஊக்கப்படுத்துவது வலிமையை வளர்ப்பதாகும்.

மனதும், உடலும் நோயற்று இருப்பது உடல் நலத்தை வளர்ப்பதாகும்.

இதயத்தில் மகிழ்ச்சி, சாத்விக திருப்தி, தெளிவு, முகத்திலும் உடலிலும் தூய்மையான எண்ணம் காரணமாக ஏற்படுவது ஆனந்த மலர்ச்சி. இன்பம் இவற்றை வளர்ப்பது இன்பத்தின் வளர்ச்சியாகும்.

மனப்பாங்கு அன்பு மிகுந்து இருப்பதும், அவ்வன்பினால் உடலில் ஏற்படும் புல்லரிப்பு முதலிய அடையாளங்களும் வெளிப்படுவது அன்பின் வளர்ச்சியாகும்.

ஆயுள், அறிவு, வலிமை இவற்றை வளர்க்கும் உணவு வகைகளான பால், நெய், காய், கீரை, பழம், சர்க்கரை, கோதுமை, சோளம், கடலை, பச்சைபயிர், அரிசி இவை சாத்வீக உணவுகள் இவற்றைக் குறிப்பிடு வதற்காகத் தான் உணவுக்கு இலக்கணம் கூறுகிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply