கேசவா! இவர்களுக்கு எந்தவித கதி ஏற்படுகிறது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா!’மனம் போல் மாங்கல்யம்’ என்பது பழமொழி, தேவதைகளைப் பூசை செய்பவர்கள் தேவலோகத்தை அடைவார்கள்.
ராகு, கேது இவர்களை வழிபடுபவர்கள், பூத கணங்களை வழி படுபவர்கள் அவரவர் வழிபடும் இடங்களுக்கே செல்கின்றனர் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எந்த மனிதர்கள் சாஸ்திர விதிமுறைகளை விடுத்து, மனம் போனபடி, கொடிய தவம் செய்கிறார்களோ, அவர்கள் அகங்காரம், பேராசை, விருப்பம் மற்றும் உடல் வலிமை இவற்றின் மீது கர்வமும் கொள்கிறார்கள்.
கேசவா!இவர்கள் கர்வம் உள்ளவர் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! அவர்களுக்கு உலகியல் போகங்களில் பேராசை இருக்கும். அவர்களின் உள்ளத்தில் பலவித போகங்களைப் பற்றிய ஆசை இடைவிடாது வளர்ந்து கொண்டே இருக்கும்.
“ நாம் விரும்பியதை அடைந்தே தீருவோம். நமக்கு உடல் வலிமை உள்ளது. நமது விருப்பத்திற்கு தடை போட எந்த சக்தியால் முடியும்” என்று திமிர் பிடித்து அலைவார்கள். இக்கருத்தை வைத்து தான் இவர்கள் பேராசை, பற்று, வலிமை இவற்றால் கர்வம் உள்ளவர் என்று கூறுகிறேன் என்கிறார்.
உடல் உருவில் உள்ள பூத சமுதாயத்தையும், உள்ளத்தில் உறையும் பரமாத்மாவான என்னையும் துன்புறுத்துகிறார்கள். அந்த அறிவிலிகளை நீ அசுரப் பண்புடையவர்கள் என அறிந்து கொள்.
கேசவா! உடல் உருவில் உள்ள பூத சமுதாயம் என்பதைப் பற்றி விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! ஐம்பெரும் பூதங்கள் மனம், புத்தி, அகங்காரம், பத்துப் புலன்கள், ஐந்து புலன்களுக்கு உரிய விசயங்கள் ஆக இந்த இருபத்து மூன்றின் கூட்டத்தை “பூத சமுதாயம்” என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! “பூத சமுதாயத்தையும் என்னையும் துன்புறுத்துபவர்” என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! சாஸ்திரங்களுக்கு முரணாக மனம் போனபடி கொடிய தவம் செய்பவர்கள் பலவிதமான பயங்கரமான நடைமுறைகளினால் பூத சமுதாயத்தை அதாவது உடலை வருத்தி மெலியவும் பலமற்றதாகவும் செய்கிறார்கள்.
தமது கடுமையான நடவடிக்கைகளினால் உள்ளத்தில் உறைகின்ற பரமாத்மாவுக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறார்கள்.
அனைவரது உள்ளங்களிலும் ஆத்மாவாகப் பரமாத்மா இருக்கிறார். ஆகவே, ஒருவன் தனக்கோ அல்லது ஏதேனும் ஆத்மாவுக்கோ தீங்கு இழைத்துக் கொண்டால் கூட அது பரமாத்மாவுக்குச் செய்த தீங்கை ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.