அதாவது, மதிப்பு, தற்பெருமை, போற்றுதல், கௌரவம் இவற்றிற்காகவே செல்வத்தின் பேராசையால் பிறரை ஏமாற்றி தன்னை உயர்த்தும் வகையில் கூறுவது.
தன்னை தர்மாத்மா பகவானுடைய பக்தன், ஞானி, மகாத்மா என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்வது பகட்டாக தர்ம காரியங்கள் செய்வது.
கொடையாளி போல காட்டிக் கொள்வது. பக்தி, விரதம், உபவாசம், யோக சாதனை புரிவதாகக் காட்டிக் கொண்டு
எப்படியேனும் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வது பகட்டு ஆகும்.
கல்வி, செல்வம், குடும்பம், சக்தி, வயது, வலிமை, ஐஸ்வர்யம் இவற்றால் கர்வம் கொள்ளுதல் பிறரைத் தாழ்வானவர் என்று கருதி அவர்களை அவமதிப்பது இவை
இறுமாப்பு ஆகும்.
தான் சிறந்தவன், பெரியவன், போற்றுதற்கு உரியவன் என்று நினைத்து தனக்கு வரும் பெருமை, புகழ், பெயர் எல்லாம் தனக்கு உரியவை என்று அவற்றை விரும்புவது, மகிழ்வது, தற்பெருமை கொள்வதாகும்.
தீய பழக்கத்தினால் சினம் கொள்வது. தீய சேர்க்கையினால் பிறர் தன்னை அவமதித்தாலும், ஒதுக்கினாலும்,
தூற்றினாலும், மனதிற்கு விரோதமான காரியம் நடந்தாலோ பிறர் ஏச்சைக் கேட்டால், தீமையைக் கண்டால் உள்ளத்தில் ஏதாவது வெறுப்பு, கொதிப்பு இவற்றால் பழிவாங்கும் எண்ணம் ஏற்படும்.
மேலும், உதடு துடிப்பது, முகம் பயங்கரமாக தோற்றம் ஆவது, கண் சிவப்பது, புத்தி பிசகி என்ன செய்வது என்று விவேகம் இல்லாமல் நடப்பது ‘கோபம்’ எனப்படும்.
மென்மை சிறிதும் இன்றி ஒருவரை திட்டுவது, கடுமையாகப் பேசுவது, கேலி செய்வது, சொற்களால் ஏற்படும் கடுமை, பணிவின்மை, உடலால் செய்யப்படும் கடுமை, பொறுமையும், தயவுமின்றிப் பழிவாங்கவும் கொடுமைப்படுத்தவும் எண்ணுவது மனதின் ‘கடுமை’ எனப்படும்.
பகவான் இருக்கிறார் என்பதை ஏற்காமல் பகவானிடம் பகை கொண்ட நாஸ்திகர், அசுரர் இத்தகை தீய பண்புகள், தீய நடத்தைகள் அசுர சம்பந்தப்பட்ட மனிதர்களின் இலட்சணங்கள் இவற்றில் ஒன்றோ, சிலவோ இருந்தாலும் அவன் அசுர சம்பந்தப்பட்டவன் ஆவான் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! தெய்வீகப் பண்பு மோட்சத்திற்கும், அசுரப் பண்பு பந்தத்திற்கும் காரணமாகும் என்று கருதப்படுகிறது. நீ தெய்வப் பண்புடன் பிறந்திருக்கிறாய். ஆகவே, நீ வருந்தாதே! உன்னிடம் தெய்வப் பண்புகளின் இலக்கணங்கள் குடி கொண்டுள்ளன.
இந்த தெய்வ சம்பந்தப்பட்ட நீ சம்சார சூழலில் இருந்து விடுவிப்பது உனக்கு மங்களம் உண்டாகும். எனவே, சிறிதும் ஐயப்பப்படத் தேவையில்லை என்கிறார்கள் கிருஷ்ணன்.