தனக்குத் தீங்கிழைத் தவரிடமும் கூடக் கோபமின்மை, கர்மங்களைச் செய்வதில் ‘நான் கடவுள்’ என்று அபிமானமின்மை, மனம் அலையாமல் அமைதியாக இருத்தல்.
ஒருவரையும் குறை, பழி முதலியன கூறாமை, உயிரினங்களிடத்தில் இயல்பாகத் தோன்றும் பரிவு, புலன்களில் நுகர் பொருள் வந்து சேர்ந்தாலும் அவற்றில் பற்று இன்றி இருத்தல்.
மென்மை,உலகியல், அறநெறி இவற்றிற்குப் புறம்பான செயல்களில் வெட்கம், வீணான செயல்களைப் புரியாதிருத்தல்.
அர்ச்சுனா! பொலிவு, பொறுமை, உறுதி, தாரணாசக்தி, புறத்தூய்மை, எவரிடமும் பகைமை பாராட்டாமை, தற்பெருமை கொள்ளாமை இவைகள் எல்லாம் தெய்வீக சம்பந்தப்பட்டவர்களின் மனப்பாங்குடன் பிறந்தவர்களின் இலக்கணங்கள் ஆகும்.
அதாவது, சான்றோர்கள் பிறரை நல்வழிப்படுத்தும் சிறந்த சக்தி பொலிவு ஆகும்.
சிறந்த மனிதர்களின் எதிரில் போகத்தில் விருப்பம் உள்ள தாழ்ந்த மனப்பான்மை உடைய மனிதர் கூட பெரும்பாலும் தீய செயல்களில் ஈடுபடாமல் அவர்கள் சொற்படி நல்ல கர்மங்களில் ஈடுபடுவார்கள். இதுவே, பெரியோர்களின் பொலிவு ஆகும்.
பெரிய பெரிய ஆபத்துக்கள், பயம், துயரம் வந்தாலும், சிறிது கூடக் கலங்காமல் இருப்பது. காம, விரோத, பயம் லோபம் முதலிய வற்றினால் எவ்வகையிலும் சிறிது கூடத் தனது தர்மத்தில் நின்றும், கடமையில் நின்றும் வழுவாமல்
உறுதியுடன் இருப்பதாகும்.
நேர்மையாக உழைத்துக் கிடைக்கும் செல்வம் சுத்தமானது. அந்த செல்வத்தினால் அடையப்பட்ட உணவுப் பொருட்கள் சுத்தமானது.
சுத்தமான நடத்தை, நீர், மணல் இவற்றால் உடலை சுத்தம் செய்வது இவை எல்லாம் புறத்தூய்மை.
தான் சிறந்தவன், பெரியவன், போற்றுதலுக்கு உரியவன் என்று நினைப்பது. மரியாதை, புகழ், கௌரவம், பூஜை இவற்றில் விருப்பம் கொள்வது. தன்னைப் பற்றி பெருமையாக நினைப்பது இவை அறவே இல்லாமல் இருப்பது செருக்குக் கொள்ளாமை யாகும்.
பகவானின் பெயரை உச்சரிப்பது, அவரை உணர்ந்து அடைவதற்காக சாதனைகள் புரிவது, அனைத்தும் ‘தெய்வ சம்பந்தப்பட்ட நற்செயல்கள்’ ஆகும் என விவரித்து கூறுகிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! பகட்டு, ஆடம்பரம், இறுமாப்பு,தற்பெருமை, கோபம்,கடுமை, அஞ்ஞானம் இவைகள் எல்லாம் அசுரப் பண்புடன் பிறந்தவர்களுடைய இலக்கணமாகும்.