கேசவா! வேதாந்தம் என்பதை விவரியுங்கள். அதை தாங்களே செய்வதாகச் சொல்வதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! வேதங்களின் உட்கருத்துக்களை நிர்ணயிப்பதாகும். வேதங்களில் ஏற்படும் சந்தேகங்களை நீக்கி பரமாத்மாவிடம் எல்லாவற்றிற்கும் இணக்கம் காண்பது தான் வேதாந்தம். அவற்றைச் செய்பவனும் நானே என்கிறார்.

மேலும், இவ்வுலகில் அழிபவன் என்றும், அழியாதவன் என்றும் இரண்டு வகையான மனிதர்கள் உள்ளனர். உடல் அழியக்கூடியது, ஆத்மா அழியாதது.

எவர் மூவுலகங்களிலும் உட்புகுந்திருந்த போதிலும், உடல் அழிந்தாலும், ஆத்மா என்றும் அழியாதவராய், விகாரம் அற்றவன் ஆனந்தமயமானவன் அசுர குணங்களை அடக்கி ஆள்பவர்.

ஈஸ்வரன், சர்வ வல்லமை படைத்தவன், குணாதீதர், சுத்தர், அனைத்துக்கும் ஆத்மாவான புருசோத்தமன் நானே என்கிறார்.

அழியக்கூடிய சட வர்க்கத்திற்கு அப்பாற் பட்டவனாகவும், அழியாத ஆத்மாவைக் காட்டிலும் சிறந்தவனாகவும் உள்ளேன். இக்காரணத்தினால் உலகிலும், வேதத்திலும் புருசோத்தமன் எனப்புகழ் பெற்று உள்ளேன் என்கிறார்.

பரதகுலத் தோன்றலே! எந்த ஞானி என்னை இவ்விதம் புருசோத்தமன் என்று தத்துவ ரீதியாக அறிகிறானோ, அவன் எல்லாம் அறிந்த எல்லா விதமாகவும் எப்பொழுதும் வாசுதேவனும், பரமேஸ்வரனும் ஆன என்னையே வழிபடுகிறான்.

பாவம் அற்றவனே அர்ச்சுனா!மிகவும் ரகசியமாக மறைத்துப் போற்றத்தக்க இந்த சாஸ்திரம் என்னால் கூறப்பட்டது.

எனது குணங்கள், பிரபாவங்கள், தத்துவம், ரகசியம் இவை முக்கியமாகக் கூறப்பட்டது. ஆகவே, மிகவும் ரகசியமாகப் போற்றத்தக்கது.

“நான் யாரிடமும் இவ்விதம் என் குணம், பிரபாவம், தத்துவம், ஐஸ்வர்யம் இவற்றை வெளிப்படுத்தியது இல்லை. ஆகவே, நீ தகுதி இல்லாத யாரிடமும் இந்த ரகசியத்தைச் சொல்லக் கூடாது.”

சர்வ வல்லமை படைத்த அனைத்தும் அறிந்த பரமேஸ்வரன் ஆகிய என்னால் கூறப்பட்டது. இது எல்லா வேதங்களின் சாஸ்திரங்களின் ‘பரம சாரமான விசயம்.’

அனைத்துக் கடைமைகளையும், முழுமையாக ஆற்றி எல்லாவற்றின் பயன்களையும் பெறுவது தான் செய்ய வேண்டியதைச் செய்து முடிப்பது ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.

பதினைந்தாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Share.

Leave A Reply