அர்ச்சுனா! ஆத்மா காது, கண், மூக்கு,  நாக்கு, சருமம் இந்த ஐந்து புலன்களுடன் மனதையும் சார்ந்து கொண்டு அவற்றின் உதவியுடன் புலன் நுகர் பொருட்களை அனுபவிக்கிறான்.

ஆத்மா உடலை விட்டுக் கிளம்பும் பொழுதும் உடலில் இருக்கும் பொழுதும், போகங்களை அனுபவிக்கும் பொழுதும், முக்குணங்களுடன் கூடி இருக்கும் பொழுதும் அறிவிலிகள் அறிவது இல்லை.

விவேக ஞானம் என்ற கண் படைத்த விவேகிகளான ஞானிகள். ஆத்மாவின் உண்மையான சுயரூபத்தைக் குணங்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் போது கூட அறிகிறார்கள்.

அதாவது, உடலை விடும்போதும், உடலில் இருக்கும் போதும், விசயங்களை அனுபவிக்கும் போதும், ஒவ்வொரு நிலையிலும் ‘ஆத்மா’ உண்மையில் புலன்களுக்கு அப்பாற்பட்டவன். சுத்தன், ஞான வடிவினன் எதிலும் ஒட்டாதவன் என்று புரிந்து கொள்கிறார்கள்.

யோகிகளும் முயற்சி செய்தே தம் இதயத்தில் உறைகின்ற இந்த ஆத்மாவை தத்வரீதியாக உணர்கிறார்கள்.

ஆனால், எவர்கள் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லையோ, அந்த அஞ்ஞானிகள் முயன்றாலும் கூட இந்த ஆத்மாவை அறிவதில்லை.

கேசவா! மூடர்கள் ஆத்மாவை அறிய மாட்டார்கள். ஞானக்கண் பெற்ற விவேகம் உள்ள ஞானிகள் தான் அறிவார்கள் என்கிறீர்கள். இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! மூடர்கள் என்பது அஞ்ஞானிகளைக் குறிக்கிறது. ஞானக்கண் படைத்தவர் என்பது விவேகம் உள்ள ஞானியைக் குறிக்கிறது.

ஞானி என்பது சத்வ குணம் படைத்த உயர்ந்த நிலையில் உள்ள சாதகர்களைக் குறிக்கிறது.

அஞ்ஞானிகள் என்பது ராஜச குணம், தாமச குணம் நிறைந்த மனிதர்களைக் குறிக்கிறது.

ஞான விவேகம் உள்ளவர்கள் முயன்றால் தெரிந்து கொள்ளலாம். அஞ்ஞானம் உள்ளவர்கள் முயன்றாலும் அறிய முடியாது  என்று விளக்குகிறார் கிருஷ்ணன்.

சூரியனில் உள்ள ஒளி உலகனைத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது. சந்திரன், நெருப்பிலும் ஒளி பிரகாசிக்கிறது. இவற்றிலும் நான்தான் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்.

Share.

Leave A Reply