அர்ச்சுனா! பரமபதத்தை அடைந்த பிறகு மனிதர்கள் சம்சாரத்திற்குத் திரும்புவதில்லை அந்த அவயம் பிரகாசமான பரம பதத்திற்கு சூரியன், சந்திரன், அக்னி தேவன் மூவரும் ஒளி தருவதில்லை.
அது என்னுடைய மேலான இடமாகும். மாயையைக் கடந்த என்னுடைய பரமபதம் என் சுயரூபம். அதை அடைவதே பரமகதியாகும்.
அர்ச்சுனா! ஆதவன் சுடுவதில்லை, காற்று வீசுவதில்லை, நிலா ஒளி வீசுவதில்லை, நட்சத்திரங்கள் மின்னுவதில்லை, நெருப்பு எரிப்பதில்லை.
எப்பொழுதும் ஆனந்தமயமானது, பரமானந்த மயமானது, அமைதியானது, பழமையானது, எப்பொழுதும் மங்கலமயமானது எல்லோரும் விரும்பத்தக்க இடமே பரமபதம் என்கிறார் கிருஷ்ணன்.
மனித உடலில் என்றும் உள்ள ஆத்மா என்னுடைய அம்சமே. அதுவே,
பிரகிருதியில் உள்ள மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்க்கிறது.
கேசவா! ‘மனம் மற்றும் ஐந்து புலன்களையும் ஈர்ப்பது’ என்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! ஐந்து அறிவுப் புலன்களும், மனமும் ஆக ஆறும் தான் எல்லா போகங்களையும் அனுபவிப்பதில் முக்கியமானது.
ஆத்மா ஒரு உடலில் இருந்து மறு உடலுக்குப் போகும்போது முதலில் மனதோடு கூட ஐம்புலன்களையும் ஈர்த்துச் செல்கிறான். விசயங்களை அனுபவிப்பதற்கு மனமும், ஐந்து அறிவுப் புலன்களும் முக்கியம். ஆனதால், இவை ஆறையும் ஈர்க்கிறான் என்கிறேன்.
காற்று மணம் உள்ள இடத்தில் இருந்து பலவித மணங்களை இழுத்துச் செல்வது போல உடலை ஆள்பவனான ஆத்மா எந்த உடலை விட்டுக் கிளம்புகிறதோ! அதில் இருந்து மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு எந்த உடலை அடைகிறதோ அதில் வந்து சேர்கிறது என்கிறார்.
அதாவது, சூட்சம உடம்புடன் தொடர்பு இருப்பதால், அதன் வழியாக ஒரு உடம்பில் இருந்து மற்றொரு உடம்புக்கு ஆத்மா வந்து சேர்கிறது என்கிறார் கிருஷ்ணன்.