ஆதியும், அந்தமும் தொடர்ச்சியாகத் தோன்றித் தோன்றி மறையும் இந்தப் பரம்பரை எப்போது தொடங்கியது எதுவரை தொடரும் என்பதும் தெரியாது.

இப்படி இருக்கும் போது ஒரு கணம் இருப்பது போல் தெரிவது, மறுக்கணம் இருக்காது. ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கும். சம்சார மரத்தின் ஆதி, அந்தம், இருப்பு மூன்றும் புலப்படாதவை என்கிறார் கிருஷ்ணன்.

ஆகையால் சம்சாரத்தைப் பற்றிச் சிந்திப்பதைத் துறந்து அதற்கு ஓய்வு கொடுத்து அகங்காரம், மமகாரம், வாசனை, முன்வினை இவற்றை வைராக்கியம் என்னும் கோடாரியால் வேரோடு வெட்டி எறிந்து விடு என்கிறார் கிருஷ்ணன்.

பரமேஸ்வரனிடம் சென்ற மனிதன் மீண்டும் சம்சாரத்திற்குத் திரும்பி வருவதில்லை. அழியாத வேராகிய பரமேஸ்வரனை சரணடைந்து தியானிக்க வேண்டும் என்கிறார்.

மேலும், தற்பெருமை, மோகம் அகன்றவர்கள் பற்று என்ற குறைபாட்டை வென்றவர்கள் பரமாத்மா சுய ரூபத்தில் என்றும் நிலை பெற்றவர்கள்.

ஆசைகளை முழுமையாக அழித்துக் கொண்டவர்கள். இன்பம், துன்பம் என்ற இரட்டைகளில் இருந்து விடுபட்டவர்கள் ஆகிய ஞானிகள் அழிவற்ற பரமபதத்தை அடைகிறார்கள்.

கேசவா! மோகம் அகன்றவர்கள் என்று அறிவது எப்படி என விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! கௌரவம், புகழ் இவையே மோகம். விவேகம் இன்மை, விபரீதமான கருத்து, குழப்பம் தாமச குண விளைவுகள் இவை இரண்டும் அற்று இருக்க வேண்டும்.

பிறப்பு, பண்பு, செல்வம், கல்வி இவற்றால் தன்னைப் பற்றி சற்றுக் கூட உயர்வாக நினைத்துக் கொள்ளாமல் தற்பெருமை கௌரவம், புகழ் முதலியவற்றிற்கும்.

விவேகம் இன்மை, குழப்பம் முதலிய தாமச குண விளைவுகளிலும் சம்பந்தம் சிறிதும் இல்லாதவர்களே தற்பெருமை, மோகம் அகன்றவர்கள் என்கிறார் கிருஷ்ணர்.

கேசவா! காமம் என்று எவற்றை அழைக்கிறார்கள். அவற்றை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! ‘காமம்’ என்பது ஆவல், விருப்பம், தேவை, வாசனை, சபலம் இவற்றை அதிகமாகவோ, குறைவாகவோ கொண்ட  மனதின் செயல்பாடுகள் ஆகும்.

எல்லாவிதமான காமங்களும் அறவே அழிந்தவர்கள். ஆவல், விருப்பம், சபலம், சிறிது கூட இல்லாதவர்கள். தம் ஆசைகளை முற்றிலும் அழித்துக் கொண்டவர்கள் என்கிறார்.

சுக, துக்கம், வேண்டியது, வேண்டாதது விருப்பு வெறுப்பு, இவ்வாறு உள்ள இரட்டைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவர் ஞானி அவரை பரமாத்மாவை சரணடைந்து பகவானை உணர்பவர்.

அஞ்ஞானம் சிறிது கூட இல்லாதவர்கள் ‘மூடர்கள்’ என்கிறார். பரமாத்மாவின் மாயையால் வெகுவாக வளர்ந்துள்ள இந்த சம்சார மரத்தில் இருந்து முற்றும் அகன்று பரமாத்மாவின் பரமபதத்தை அடைவதே அழியாப் பெரும் நிலையை அடைவதாகும் என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply