கேசவா! பெருமை, சிறுமை, இவற்றில் சமமாக இருப்பது எவ்வாறு,என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! மானம், அவமானம் எல்லாம் உடலைத்தான் சாரும். உடலில் அபிமானம் கொண்டு உலகியலில் பழகுபவன் தான் பெருமை கிடைத்தால் விருப்பமும், சிறுமை நேர்ந்தால் வெறுப்பும் கொள்கிறான்.
அதனால், பெருமையில் மகிழ்ச்சியும், சிறுமையில் வருத்தமும் ஏற்படுகிறது. அதனால், பெருமை படுத்துப்பவனிடம் அன்பும், சிறுமை படுத்துபவனிடம் பகையும் உண்டாகின்றது.
குணதீதனுக்கு எல்லாம் சமமாக ஏற்றுக் கொள்வதால் பெருமை, சிறுமை செயல்கள் உட்பட அனைத்தும் கனவு போல மாயை. எனவே, விருப்பு வெறுப்பு, மகிழ்ச்சி, வருத்தம் ஏற்படுவதில்லை. இதுவே, பெருமை, சிறுமை சமமாக ஏற்றுக் கொள்வதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
உடல், மனம், புத்தி, புலன்களால் சாஸ்திரங்களில் கூறப்பட்ட கடமைகளை, பிராப்தத்தை ஒட்டி உலகத்திற்கு வழிகாட்டும் முறையில் அதாவது உலக மக்களைத் தீய வழியில் இருந்து திருப்பி நல்ல வழியில் ஈடுபடுத்துவது என்ற நல்ல குறிக்கோளுடன் செய்வான்.
ஆனால், அந்தக் கர்மங்களில் சிறிது கூட அவனிடம் ‘நான் செய்கிறேன்’ என்ற மனப்பான்மையை முழுமையாகத் தியாகம் செய்வான் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எவன் வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் ஒன்றிய பக்தி யோகத்தினால் என்னை இடைவிடாது வழிபடுகிறானோ, அவன் இந்த மூன்று குணங்களையும் முற்றிலுமாகக் கடந்து சத், சித், ஆனந்தமயமான பரபிரம்மத்தை அடைவதற்குத் தகுதி பெறுகிறான்.
கேசவா! பகவானை இடைவிடாது வழிபடுவது எவ்வாறு என்று விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
பகவான் ஒருவரே அனைத்திலும் சிறந்தவர். அவரே நம் சுவாமி. சரண் அடையத் தக்கவர், பரமபக்தி, உயர்ந்த புகழ், தாய், தந்தை, ஊற்றார், உறவினர் அனைத்துமே அவர்தான்.
அவரை விடுத்து நமக்கு வேறொரு வரும் இல்லை என்று அறிந்து தன்னலம் பாராட்டாமல் மிகுந்த நம்பிக்கையும், பிரியமும் கொள்ள வேண்டும்.
ஒரு கணம் கூட பகவானுடைய நினைவு மறையாதோ! அப்படி மறைவதும் பொறுக்க முடியாதோ, அந்த பிரியத்துக்குத்தான் பிறழாத, வழுவாத வேறு எதிலும் நாட்டம் இல்லாத பக்தி என்று பெயர்.
பக்தி யோகத்தின் மூலம் இடைவிடாத பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள், லீலைகள் கேட்பது, கீர்த்தனம் செய்வது, தியானம், திருநாமங்களை உச்சரிப்பது, ஜபம் செய்வது பகவான் சிந்தனையில் ஆழ்ந்து இருப்பது.
மனம், புத்தி, உடல் இவற்றையும், அனைத்துப் பொருட்களையும் பகவானுடையது என நினைத்து, தன்னை வெறும் கருவியாக மட்டுமே மதித்து அவர் ஆணைப்படி அவருக்கு சேவை என்ற மனப்பாங்குடன் எல்லாச் செயல்களையும் பற்றின்றி அவருக்காகப் புரிவது நாட்டம் இல்லாத பக்தியுடன் இடைவிடாது வழிபடுவதாகும் என்கிறார் கிருஷ்ணன்.