சத்வ குணம் மேலாங்கும்போது இறப்பவர்கள், செல்லும் உலகம் மாசு அற்றதாக இருக்கும்.
ராஜச குணத்தின் ஆதிக்கத்தில் இறப்பை அடைபவன், கடமைகளில் பற்றுள்ள மனிதர்கள் இடையே பிறக்கிறான்.
தாமச குளத்தின் ஆதிக்கத்தில் இருக்கும்போது இறப்பவன், புழு, பூச்சி, விலங்கு என அறிவில்லாத பிறவிகளில் பிறக்கிறான்.
சிறந்த செயலின் பயனே சாத்வீகமானது. சுகம், ஞானம், வைராக்கியம் கொண்டது தூய்மையானது.
ராஜச செயலின் பயன் துயரமானது. தாமச செயலின் பயன் அறியாமை ஆகும் என்கிறார்.
முக்குணங்களைத் தவிர வேறு ஒருவனைக் கடவுள் என்று பார்க்காதவன், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட சத்,சித், ஆனந்த மயமான பரமாத்மாவான என்னை தத்துவ ரீதியாக அறிகிறானோ அப்பொழுது அவன் என் சுய ரூபத்தை அடைகிறான்.
மனித உடல் தோன்றுவதற்கு காரணமான இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு இவற்றில் இருந்து பிற எல்லா துன்பங்களில் இருந்தும் விடுபட்டு பரமானந்தத்தை அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! இந்த மூன்று குணங்களையும் கடந்த மனிதன் எந்தெந்த இலக்கணங்களோடு கூடியவனாக இருக்கிறான்.
மேலும் எத்தகைய நடத்தை உள்ளவனாக இருக்கிறான், எந்த உபாயத்தினால் இந்த மூன்று குணங்களையும் கடக்கிறான் எனக் கேட்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எந்த மனிதர் சத்வ குணத்தின் செயலான பிரகாசத்தையும் ராஜச குணத்தின் செயலான செயல் ஊக்கத்தையும், தாமச குணத்தின் செயலான மோகத்தையும் அவை வரும்பொழுது அவற்றை வெறுப்பதில்லை. விலகும் போது அவற்றைத் திரும்ப அடைய விரும்புவதில்லை.
எந்த உணர்விலும், செய்கையிலும், தோற்றத்திலும், அழிவிலும், எக்காலத்திலும் ஒரே நிலையில் இருப்பவன் எந்த நிலையிலும் ஒரே விதமான பாங்கு கொண்டிருப்பான்.
எவன் சாட்சியைப் போல இருந்து கொண்டு குணங்களால் அசைக்கப்படாமல் குணங்களே குணங்களிலேயே இயங்குகின்றன என்று அறிந்து சத்,சித், ஆனந்த பரமாத்மாவிடம் ஒன்றியவனாக நிலைத்திருப்பவன் என்று அறிய வேண்டும்.
அவன் பரபிரம்மமான பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்த பிறகு மனிதனுக்கு என்று தனித்தன்மை கிடையாது. என எண்ணும் போது நிலை குலைய மாட்டான். அது சாத்தியமும் கிடையாது என்கிறார் கிருஷ்ணன்.
அதாவது, தன் நிலையான ஆத்மா சுயரூபத்தில் இடையறாவது நிலைத்து நிற்கிறவன் இன்ப, துன்பங்களை சமமாகக் கருதுபவன்.
மண்ணையும், கல்லையும், பொன்னையும் சமமாக மதிப்பவன். வேண்டியது, வேண்டாதது இரண்டையும் ஒன்றாகவே நினைப்பவன். இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் ஒன்றென கருதுவான் அவனது புத்தி எப்பொழுதும் திடமாக இருக்கும்.
ஒருவருடைய உண்மையான அல்லது குற்றங்களை எடுத்துக் கூறுவது திட்டுவதாகும். நற்பண்புகளை வர்ணிப்பது வாழ்த்துவதாகும். இவற்றின் தொடர்பு பெரும்பாலும் பெயருடனும், சில உடலுடனும் இருக்கும்.
நற்குணம் நிறைந்தவனுக்கு தன் உடலிலோ தனது பெயரிலோ சிறிதும் சம்பந்தம் இருக்காது. அதன் காரணமாக புகழ்சியோ, இகழ்சியோ, மகிழ்ச்சியோ,வருத்தமோ ஏற்படாது.
இகழ்கிறவனிடமும், புகழ்கிறவனிடமும் கோபமோ, மகிழ்ச்சியோ ஏற்படாது. அவனுக்கு எப்பொழுதும் ஒரே மனப்பாங்குதான். அது தான் அவனுடைய சமநிலை என்கிறார் கிருஷ்ணன்.