கேசவா! தன்னைத் தானே அழித்துக் கொள்வது என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! தான் மற்றவர்களிடம் இருந்து வேறாக தனித்திருப்பதாக நினைத்துக் கொள்வான். உடன் பிறக்கும் போது தான் பிறப்பதாகவும் அது அழியும் போது தான் இறப்பதாகவும் நினைக்கிறான்.
அதனால், பல பிறவிகளில் பிறந்து இறந்து கொண்டே இருக்கிறான். இதுதான் தன்னைத் தானே அழித்துக் கொள்வது என்பதாகும்.
எவன் சமமாக பரமாத்மாவை எங்கும் காண்கிறானோ, அவன் தன்னைப் பரமாத்மாவைத் தவிர வேறாகக் கருதுவதில்லை.
உடல்களுடன் தன்னை சம்பந்தப்படுத்திக் கொள்வதில்லை. ஆகவே, உடல் அழியும்போது தன் அழிவைக் காண்பதில்லை. ஆகையால், அவன் தன்னைத் தானே அழித்துக் கொள்வதில்லை.
அவன் இருப்பது அழிவற்ற சத், சித், ஆனந்தமயமான பரபிரம்மமான பரமாத்மாவுடன் ஒன்றிய நிலை.ஆகவே, அவன் பிறப்பு இறப்புகளில் இருந்து நிரந்தரமாக விடுபட்டவன் ஆகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
எந்த மனிதன் எல்லா கர்மங்களும், எல்லா விதங்களிலும் பிரகிருதியினால் செய்யப்படுவன வென்றும். மேலும், ஆத்மாவைக் கடவுள் அல்ல என்றும் பார்க்கிறானோ அவனே உண்மையைப் பார்க்கிறவன் ஆவான்.
ஆத்மா என்பது மனம், புத்தி, உடல் இவற்றுடன் சேர்ந்து எல்லாக் கர்மங்களையும் செய்கிறது. அவற்றின் பயனை அனுபவிக்கிறது என்று எவன் நினைக்கிறானோ, அவன் பார்வை மதி மயக்கத்தினால் ஏற்பட்டது தவறானது.
ஆத்மா நிரந்தரமானது, சுத்தமானது, எல்லாம் அறிகிறவன், பற்றுகளில் விடுபட்டவன், எவ்வித விவகாரங்களுக்கும் உட்படாதவன்.
பிரகிருதியுடன் அவனுக்கு தொடர்பு கிடையாது. ஆகவே, அவன் எந்தக் கர்மத்தையும் செய்வதில்லை. கர்மத்தின் பயனையும் அனுபவிப்பதில்லை. இந்த உண்மையை தன் சொந்த அனுபவத்தின் மூலம் நேராக உணர்வதே “ஆத்மா கர்த்தா அல்லன்” என்று உணர்வதாகும் என்கிறார்.