வேறு சிலர் அதாவது மந்த புத்தி உள்ளவர்கள் இவ்வாறு அறியாமல் தத்துவத்தை அறிந்த பெரியோர்களிடம் இருந்து கேட்டு அதற்கேற்ப நடந்து கொள்கிறார்கள்.
கேட்டு அறிந்து கொண்ட உபதேசத்தையே மேலான கதியாகக் கொண்டவர்களும் மரண ரூபமாகிய சம்சாரக் கடலை சந்தேகம் இன்றி கடக்கிறார்கள்.
மோட்ச நாட்டம் என்பது கற்றவர், கல்லாதவர், மேலோர், கீழோர் என எல்லோருக்கும் நாட்டம் உண்டாவது வியப்பில்லை.
கற்றவர் கடைபிடிப்பது முடியும். என்றாலும், கல்லாதவர் கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதன் வழி நடந்து மோட்சம் அடையலாம்.
ஜபாலா என்பவளுடைய குமாரன் சத்யகாமன். அவன் பிரம்மத்தை அறியும் விருப்பத்துடன் கௌதம கோத்ரத்தைச் சார்ந்த காரிதுருமதர் என்ற
மகரிஷியிடம் சென்றான்.
அவன் வருகையை புரிந்து கொண்ட மகரிஷி. மிகவும் மெலிந்த பலவீனமான நானூறு பசுக்களைப் பொறுக்கி அவனிடம் ஒப்படைத்து…
‘நல்ல பிள்ளாய்!’ இப்பசுக்களின் பின்னே போ என்று ஆணையிட்டார்.
குருவின் ஆணையை ஏற்று மிகுந்த நம்பிக்கைடனும், உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நானூறு பசுக்களையும் காட்டிற்கு ஓட்டிச் சென்றான்.
அவன் புறப்படும் சமயம் குருவிடம் “இவற்றை ஆயிரமாகப் பெருகின பிறகுதான் திரும்புவேன்” என்று கூறினான்.
நீரும்,புல்லும் மண்டிக்கிடந்த ஆபத்து ஒன்றும் இல்லாத காட்டில் அவற்றை மேய்த்து ஆயிரமாகப் பெருக்கிக் கொண்டு திரும்பினான்.
திரும்பி வரும் வழியிலேயே அவனுக்கு பிரம்ம ஞானம் ஏற்பட்டுவிட்டது.
இவ்விதம் தத்துவம் அறிந்த ஞானிகள் ஆன பெரியோர்களின் ஆணையை ஏற்று மிகுந்த நம்பிக்கையுடனும், விருப்பத்துடனும் அவர்கள் சொன்னபடி கேட்டு நடத்தலே பிறரிடம் கற்று உபாசித்தலாகும்.
கற்றவர், கல்லாதவர் பேதத்தை விட,உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எண்ணத்தை விட பிரம்மத்தை அடைய வேண்டும் என்ற நோக்கம் உள்ளவரே பிரம்மத்தை அடைகிறார். அவரே பிராமிணாக உயர்வு பெறுகிறார். பிறவிப்பிணி நீங்கி சம்சாரக் கடலைக் கடக்கிறார் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! எத்தனை எத்தனை அசைவன, ஆசையாதன ஆகிய வர்க்கம் உண்டாகின்றனவோ, அவை அனைத்தும் உடல், ஆத்மா இரு சேர்க்கையாலுமே உண்டாகின்றன.
எந்த மனிதன் அழியக்கூடிய சராசரங்களான அனைத்திலும் பரமேஸ்வரனான அழியாதவராகவும், எங்கும் சமமாக இருப்பவராகவும் பார்க்கிறவனே உன்மையில் என்னைப் பார்ப்பவன் ஆவான்.
அதாவது அழிவது உடலின் தர்மம், ஆத்மாவின் தர்மம் அன்று. ஆத்ம தத்துவம் அழிவற்றது, நிரந்தரமானது. வெவ்வேறு தோற்றமாக பிறவி எடுக்கிறது என்கிறார் கிருஷ்ணன்.
எந்த ஒருவன் அனைத்திலும் சமமாக நிலை பெற்றிருக்கும் பகவானை சமமாகப் பார்த்துக் கொண்டு தன்னைத் தன்னாலேயே அழித்துக் கொள்வது இல்லையோ! அதனால், அவன் பரமகதியை அடைகிறான்.