உண்மையாக, நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் பொருள் தூய்மையானது. அந்தப் பொருளைக் கொண்டு வாங்கிய உணவு தூய்மையானது. நீர், மண் கொண்டு உடலை சுத்தம் செய்வது உடல் தூய்மை.
விருப்பு, வெறுப்பு, வஞ்சனை, சூது போன்ற விகாரங்கள் அற்று இருப்பது உள்ளத் தூய்மையாகும்.
மனம், புலன்களுடன் கூடிய உடலைக் குறிப்பது ஆத்மா. ஆத்மா அனுக்கிரகம் பெற்றவர்கள் மனம், புத்தி புலன்களோடு கூடிய உடல் அவர் விரும்பியவாறு செயல்படும்.
போக விசயங்களில் திரும்ப அவரை சிக்க வைக்காது. இடைவிடாது அவருடைய விருப்பப்படி சாதனைகளிலேயே ஈடுபடும்.
இவ்வுலகப் பரலோக போகங்கள் அனைத்திலும் பற்றற்ற தன்மை. மேலும், அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் இவற்றில் உள்ள துக்கத்தையும், குறைபாடுகளையும் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து இவற்றின் குறைகளை உணர வேண்டும்.
நான்கு குறைபாடுகள் இல்லாத பொருள் உலகில் இல்லவே இல்லை. ஒரு திடமான வீடு கட்டப்படுகிறது அது தான் அதன் பிறப்பு.
பழுதடைந்து விடுகிறது. இது அதற்கு ஏற்படும் நோய். உடனே, மரமாத்துச் செய்ய வேண்டி இருக்கிறது. இதுவே, சிகிச்சை ஆகும்.
அது பழையதாகி விடுகிறது. இதுதான் மூப்பு. பிறகு மரமத்துச் செய்தும் பயனிலை. இடித்து விழுந்து விடுகிறது. இதுவே, இறப்பு.
சிறியதோ, பெரியதோ எந்த பொருளுக்கும் இதே கதி தான். இப்படித்தான் உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் உண்டு என்று அறிந்து வைராக்கியத்துடன் வாழ வேண்டும்.
மனைவி, மக்கள், வீடு, செல்வம் இவற்றில் பற்றின்மை, தன்னுடையது என்ற எண்ணமின்மை,
மமாகாரமின்மை, அவ்வாறே வேண்டியன, வேண்டாதனவற்றை அடையும் போதும் சமபவனை உடன் இருக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.
பரமேஸ்வரனான என்னிடத்தில் வேறு எதையும் எண்ணாத யோகத்தின் மூலம் பிறழாத பக்தி. தனிமையில் தூய்மையான இடத்தில் வாழும் இயல்பு கொண்டவராக இருப்பார்.
வீணான செயல்களில் ஈடுபடும் புலன்நுகர் பொருட்களில் பற்றும் கொண்ட உலகியல் மனிதர்களின் சமுதாயத்தைக் குறிக்கும்.
இவர்களால் சாதனைக்கு தடை விளையும் என்பதை அறிந்து, இவர்களிடம் இருந்து… தான் விலகி இருப்பதும், இவர்களுடன் உறவு கொள்ளாமலும் இருப்பவர்களுக்கு சாதுக்கள், மகாத்மாக்கள், சாதகர்கள் இவர்கள் சாதனைக்கு உதவி புரிவார்கள்.
ஆத்ம ஞானத்தில் எப்பொழுதும் நிலைத்து நிற்றல். தத்துவ ஞானத்தின் பொருளான பரமாத்மாவையே தரிசனம் செய்தல். இவை எல்லாம் ஞானம். இவற்றில் இருந்து மாறுபட்டு நிற்பது அஞ்ஞானம் என்கிறார் கிருஷ்ணன்.