கேசவா! இவை எல்லாம் பக்தி யோகத்தின் மூலம் பகவானை அடைந்து விட்டவர்களின் இலக்கணங்கள் என்று கூறுவதன் காரணத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! இந்த அத்தியாயமே பக்தி யோகம் தான். “என்னுடைய பக்தன் எனக்குப் பிரியமானவன். “ என்று திரும்பத் திரும்ப சொல்வதன் நோக்கம். பக்தி யோகத்தின் மூலம் மிகச் சிறந்த சித்தியைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை விளக்கவே என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

மேலும், உலகியல் ஈடுபாடு, உடல் பேணுதல், கர்மங்கள், செய்தல் இம்மூன்றில் இருந்தும் ஓய்வு பெற்றிருப்பது. ஞான மார்க்கத்தின் மூலம், மேலான நிலையை எய்திய மகான்களுக்கு இது சிறப்பாகும்.

அதுபோல மனதையும், புலன்களையும் முழுமையாக அடக்கிப்
பற்றின்றி கர்மங்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பது கர்மயோகத்தின் மூலம் பகவானை அடைந்தவர்கள் இடையே காணப்படும் என்கிறார் கிருஷ்ணன்.

எவர்கள் என்னிடம் நம்பிக்கையோடு என்னையே மேலான கதியாகக் கொண்டு மேலே கூறப்பட்ட இந்த தர்மமே உருவான அமுதத்தைப் பயன் கருதாது, அன்புடன் கடைப்பிடிக்கிறார்களோ அந்த பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள் என்கிறார்.

கேசவா! சிரத்தையும் பகவானே புகலாகக் கொண்ட மனிதர்களை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எங்கும் நிறைந்த வரும் சர்வ வல்லமை படைத்தவருமான பகவானுடைய அவதாரங்களிலும், சொற்களிலும், குணங்கள், பிரபாவங்கள், ஈஸ்வரத் தன்மை, சரித்திரங்கள் முதலியவற்றிலும் நேரில் கண்டது போன்ற, உணர்வுடன் கூடிய நம்பிக்கை கொண்டவர் சிரத்தை உடையவர் ஆவார்.

பகவானே கதி என்ற தம் உயிருக்கு ஆதாரம் என்றும், புகல் என்றும் மதித்து, அவரிடமே தம் பொறுப்பை ஒப்படைத்து அவர் விதித்ததை மனமகிழ்ச்சியுடன் ஒரு மனதுடன் ஏற்றுக் கொண்டவன் பகவானை  புகலாக கொண்டவன் ஆவான் என்கிறார்.

கேசவா! சாதக பக்தர்கள் தமக்கு மிகவும் பிரியமானவர் என்று கூறுவதன் ரகசியத்தைக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா!  சித்தர்களான பக்தர்கள் பகவானை அடைந்து விட்டவர்கள்.

இவர்களிடம் இந்த இலக்கணங்கள் இயல்பாக அமைந்துவிட்டன.

அவர்கள் பகவானிடம் என்றென்றும் ஒன்றிவிட்டவர்கள். அவர்களிடம் இப்படிப்பட்ட குணச்சிறப்பு இருப்பது பெரிய விசயம் அல்ல.

ஆனால், ஒன்றே குறியான சாதக பக்தர்களுக்கு இன்னும் பகவானுடைய தரிசனம் ஏற்படவில்லை. ஆயினும், அவர்கள் பகவனிடம் நம்பிக்கை வைத்து மிகுந்த சிரத்தையுடன் உடல், மனம், சொல், உடமைகள் எல்லாவற்றையும் பகவானுக்கே அர்ப்பணம்  செய்து அவரைப் பரமகதியாகக் கொண்டு பகவானை தரிசிக்க எண்ணி இவ்விலக் கணத்தின்படி வாழ்க்கையை கழிக்கிறார்கள்.

நேரில் தரிசனம் கிடைக்கா விட்டாலும் கூட நம்பிக்கையிலேயே இத்தனை அளவு பகவானைச் சார்ந்து இருப்பது பெருமைக்கு உரியதல்லவா.

ஆகவே, இவர்களை பகவான் தமக்கு மிகவும் பிடித்தவர்கள் என்று கூறுகிறார். இத்தகைய அன்பு உள்ளங்கள் ஆன அடியார்களுக்கு பகவான் தம் நித்திய உறவை அளித்து….

அவர்களுக்கு சந்தோசம் அளிக்காத வரையில் அவர்களுக்கு கடன் பட்டவராகவே ஆகிறார். இந்த அளவுக்கு பகவானுக்கு அவர்களிடம் மதிப்பு உண்டு.ஆகவே, அவர்களை சித்த பக்தர்களைக் காட்டிலும் மிகவும் பிரியமானவர்கள் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.

பன்னிரெண்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

Share.

Leave A Reply