எவன் ஒருபோதும் மகிழ்வதில்லையோ, வெறுப்பதில்லையோ, துயரப்படுவதில்லையோ, எதற்கும்…  ஆசைப்படுவதில்லையோ அவன்.

நல்லதும், தீயதுமான செயல்கள் அனைத்தையும் துறந்தவன் என்னிடம் பக்தி உள்ளவன். எனக்குப் பிரியமானவன் என்கிறார்.

என்னுடைய பக்தன் அகில உலகும் பகவானுடைய ரூபம் என நினைக்கிறான். அதனால், எந்த உயிரிடத்தும் வெறுப்புக் கொள்வதில்லை.

மகிழ்ச்சியில் ஏற்படும் விகாரம் இல்லாதது போலவே, சோகத்திலும் விகாரம் இருப்பதில்லை.

பொதுவாகப் பிரியம் இல்லாதது வந்து சேர்ந்தாலும், பிரியம் உள்ளது பிரிந்தாலும் மனதில் துயரம் உண்டாகும். ஆனால், என்னுடைய பக்தனுக்கு எனது லீலைகளின்  ரகசியம் தெரிந்ததால் அவன் எப்பொழுதும் பரமானந்த அனுபவத்திலேயே திளைத்திருப்பான் என்கிறார்.

எவன் பகைவனிடமும், நண்பனிடமும், மதிப்பிலும், அவமதிப்பிலும், சமபுத்தி உடையவனாக இருப்பவன். தட்ப,வெட்பம், சுக, துக்கம், சமபுத்தியுடன் இருப்பான்.

தன்னை வெட்ட வந்தவன் ஆனாலும் சரி, தண்ணீர் ஊற்றுபவன் ஆனாலும் சரி இருவருக்கும் வேற்றுமை இன்றி எப்படி மரம் நிழல், பழங்கள், பூக்கள் முதலியவற்றைக் கொடுத்து பணி புரிகிறதோ, அதுபோல…

பக்தரும் யாரிடமும் எவ்விதமான வேற்றுமையும் பாராட்ட மாட்டான். பக்தனின் சமத்துவம் மரத்தைக் காட்டிலும் அதிகம் சிறப்புடையாது.

பக்தருடைய நோக்கில் பரமேஸ்வரனைத் தவிர வேறு ஒரு பொருளும் கிடையாது. ஆகையால், வேற்றுமை என்ற சந்தேகமே எழுவதற்கு இல்லை. ஆகவே, நண்பர்களிடமும், பகைவர்களிடமும் சமபுத்தி உடையவர்களாக இருப்பார்கள்.

எங்கும் பகவானைக் காண்பதால் அவனுடைய உள்ளத்தில் ஏற்றத்,தாழ்வோ தோன்றாது. புற உலகை துண்டித்து விட்டு மனதில் பற்று இருந்தால் அந்த தியானத்தினால் விசேசமான பலன் கிடைக்காது.

மாறாக உலகில் எல்லோரிடமும் தொடர்பு இருந்தாலும், மனதில் பற்று இல்லை என்றால் ஒரு தீங்கும் நேரிடாது. ‘நட்பு’ நற்பண்பாகும். அது பகவானிடம் உள்ளது. மற்ற  ‘பற்று’ என்பது தீய பண்பு. அதுதான் மற்ற துர்குணங்களுக்கு எல்லாம் வேர். எனவே, தீய பண்பை விலக்க வேண்டும் என்கிறார்.

இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் சமமாக மதிப்பவன். பகவானை எப்பொழுதும் சிந்தித்து இருப்பவன். எந்த விதத்தில் உடலைப் பேணுதல் நடைபெற்றாலும் மகிழ்ச்சி கொள்பவன் வசிக்கும் இடத்தில் ‘தனது’ என்ற  பற்றற்றவன் நிலைத்த புத்தி உடையவன் எனக்குப் பிரியமானவன்.

Share.

Leave A Reply