என்னிடத்தில் மனதை நிலைக்க வைப்பதற்காக சாஸ்திரங்களில் பலவாறு கூறப்பட்டுள்ளன. அவற்றை எல்லோருமே கடைப்பிடிக்கலாம்.
1- சூரிய கதிர்கள் வரும் திசைக்கு எதிராக அமர்ந்து கண்களை மூடிக்கொண்டால் மனதில் எங்கும் சமமாக ஒரு ஒளி பரவுவது தெரியும்
2- அதைவிட ஆயிரக்கணக்கான மடங்கு ஒளி பகவானிடம் உள்ளது. என மனதில் சிந்தனை செய்து பரமாத்மாவினுடைய அந்த ஒளிமயமான ஜோதி ரூபத்தில் மனம் நிலைக்குமாறு அடிக்கடி முயல வேண்டும்.
3- நெருப்புக் குச்சியில் நெருப்பு நிறைந்துள்ளது போன்று, பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார் என்று புரிந்து கொண்டு மனம் எங்கெல்லாம் துள்ளி ஓடுகிறதோ, அங்கெல்லாம் சர்வ வல்லமை பெற்ற பேரன்புக்குரிய பகவான் உடைய சுயரூபத்தை பேரன்புடன் திரும்பத் திரும்ப சிந்திக்க வேண்டும்.
4- மனம் எங்கு ஓடினாலும் தடுத்து நிறுத்தி தமக்கு பிடித்த தெய்வத்தினுடைய ரூபத்தை வெளிப் படத்திலும், உள் மனதிலும் பார்த்து திரும்பத் திரும்ப நாம ஜபம் செய்ய வேண்டும்.
5- வண்டு ரீங்காரம் செய்வது போல் ஒரே குரலில் மனதில் ஓங்கார ஜபம் செய்ய வேண்டும்.
6- இயல்பாக மூச்சு விட்டு இழுக்கும் போது பகவானுடைய நாமஜபம் செய்ய வேண்டும்.
தெய்வீக நூல்களைப் படித்து, தெய்வீக ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சாதகர்களின் நிலை, தகுதி, சாதனையின் போக்கு இவற்றின் ஏற்றத்தாழ்வுகளைப் பொறுத்துப் பயன் ஏற்படா விட்டால்…
பயிற்சிக் கடினம் என்று கருதியோ மனச்சோர்வு கொண்டோ, சோம்பலினாலோ, முயற்சியைக் கைவிடலாகாது குறைக்கவும் கூடாது. மேலும், மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்விதமான பயிற்சியில் கூடத் திறமையற்றவனாய் இருந்தால் எனக்காகவே கடமைகளை ஆற்றுவது என்பதே மேலான இலட்சியமாகக் கொண்டு இரு
என் பொருட்டாகவே கடமைகளை ஆற்றிக் கொண்டே இருந்தாலும் என்னை அடைவது என்ற இலட்சியத்தை அடையலாம்.
என்னை அடைவது என்ற யோகத்தைச் சார்ந்து நின்று எதையும் செய்ய திறமை அற்றவனாய் இருந்தால் அப்போதும் மனம், புத்தி முதலியவற்றை அடக்கி வெற்றி காண்.
செய்கின்ற எல்லாக் கர்மங்களின் பயன்களையும் துறந்து விடு. நான் சொன்ன இம் மூன்றுமே கர்ம யோகம் தான்.
அதன் பயனும், பரமனை அடைவது தான். இம்மூன்றுக்கும் பயனில் வேற்றுமை இல்லை. ஆனால், சாதகர்களின் மனோபாவத்திலும், சாதனை முறையிலும் தான் மாறுபடுகிறது.
சகல கர்மங்களையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்வது பகவானுக்காகவே எல்லாக் கர்மங்களையும் செய்வது இவை இரண்டிலும் பக்தி முக்கியம்.
எல்லாக் கர்மங்களையும் துறப்பதில் தியாகம் முக்கியம். இதுவே, முக்கியமான வேறுபாடு ஆகும். கர்மங்களிலும், அவற்றின் பயன்களிலும் சிறிது கூட விருப்பு, வெறுப்பு கிடையாது.
சுக,துக்கங்களைக் கூட பகவானுடைய பிரசாதம் என்று ஏற்று எப்போதும் மகிழ்கிறான். அதனால், அவனுக்கு எதிலும் சம பாவனை ஏற்படும். விரைவில் பகவானை அடைவான் என்கிறார்.
அர்ச்சுனா! உட்பொருள் அறியாமல் பகவானை அடையும் பொருட்டுச் செய்யும் சாஸ்திரப் பயிற்சியை விட சாஸ்திரங்கள் மூலம் கிடைக்கும் ஞானம் சிறந்தது.
அந்த ஞானத்தைக் காட்டிலும் என் சுயரூபத்தை தியானம் செய்வது சிறந்தது.
தியானத்தைக் காட்டிலும், கர்மத்தின் பயனைத் துறப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் தியாகத்தின் மூலம் உடனேயே கால இடைவெளி இன்றி மேலான அமைதி உண்டாகிறது.
எவன் எல்லா உயிரினங்களிடமும், வெறுப்பு இல்லாதவனோ, தன்னலம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பு கொண்டவனோ, காரணமின்றி இரக்கம் காட்டுபவனோ, மமகாரம் அற்றவனோ,அகங்காரம் அற்றவனாகவும், இன்ப, துன்பங்கள் நேரும்போது நிலை மாறாது சமமாக இருப்பவனோ, பொறுக்கும் இயல்புடையவனோ, குற்றம் செய்தவனுக்கும் அபயம் அளிப்பவனாகவும்,
யோகியாகவும், எப்பொழுதும் எல்லா விதங்களிலும் திருப்தி உள்ளவனாகவும், மனம் புலன்களோடு கூடிய உடலைத் தன் வசப்படுத்தி என் மீது திடமான நம்பிக்கை கொண்டு என்னிடத்தில் மனம், புத்தி இவற்றை அர்ப்பணம் செய்பவன் எனக்குப் பிரியமான பக்தன் ஆவான் என்கிறார் கிருஷ்ணன்.