பனிரெண்டாவது அத்தியாயம்
    பக்தி யோகம்

இந்த அத்தியாயத்தில் பக்தி செய்வதற்கான பலவிதமான சாதனைகளைப் பற்றியும், பகவானை பக்தி செய்வது பற்றியும் பக்தர்களின் இலக்கணங்களும் கூறப்படுகின்றன.

இதன் ஆரம்பமும், முடிவும் பகவானுடைய பக்தியைப் பற்றியே இருக்கின்றன.

மூன்று சுலோகங்களில் மட்டும் ஞானத்திற்குரிய சாதனைகளைப் பற்றி சொல்லப்படுகிறது.

பக்தி யோகத்தையும், ஞான யோகத்தையும் ஒன்றோடு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும் முறையில் அவை அமைந்துள்ளன. ஆகவே, இந்த அத்தியாயத்திற்குப் ‘பக்தி யோகம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“கேசவா! வேறொன்றிலும் நாட்டம் இல்லாமல் உங்களிடம் அன்பு கொண்ட எந்த பக்தர்கள் எப்பொழுதும் உங்களுடைய பஜனையிலும், தியானத்திலும், ஈடுபட்டு சகுண ரூபனான பரமேஸ்வரனான உங்களை உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்கள்.

மேலும், அழிவற்ற சத்,சித்,ஆனந்த மயமான உருவமற்ற பிரம்மத்தையே உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்கள். இவ்விரு வகையான உபாசகர்கள் இடையே யோகத்தைச் சிறந்த முறையில் அறிந்தவர்கள் யார்? எனத் தெரிவிக்கும்படி கேட்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! என்னிடத்தில் ஒருமுகப்படுத்தி எப்பொழுதும் என்னை வழிபடுதலிலும் தியானம் செய்வதிலும் ஈடுபட்டுள்ள எந்த பக்தன் சிறந்த சிரத்தையுடன் சகுண ரூபத்தோடு கூடிய…

பரமேஸ்வரனான என்னை வழிபடுகிறார்களோ, அவர்கள் யோகிகளிலேயே மேலானவர்கள் என்று என்னால் மதிக்கப் படுவார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

அதாவது, இரண்டு விதமான உபாசவர்களில் தம்மை சகுண பரமாத்மாவாக எண்ணி பிரகலாதனைப் போன்று பகவானிடமே பொறுப்புகளை ஒப்புவித்து விடுதலே சிறந்த சிரத்தையுடன் கூடியதாக மதிக்கப்படும் என்கிறார் கிருஷ்ணன்.

பசுவிடம் பால் கறக்கும் போதும், வீட்டில் வேலைகள் செய்யும்போதும், குழந்தைகளைத் தொட்டிலில் இட்டு ஆட்டும்போதும், அழும் குழந்தையைத் தாலாட்டும் போதும், தண்ணீர் தெளிக்கும்போதும், வீடு பெருக்கும் போதும், பிற காரியங்கள் செய்யும் போதும்…

பிரியம் நிறைந்த உள்ளத்தோடு கண்களில் நீர் பெருகத் தழுதழுத்த குரலில் ஸ்ரீ கிருஷ்ணனைப் பாடிப் பரவசம் கொண்டு எப்பொழுதும்
ஸ்ரீ கிருஷ்ணனிடம் லயித்தவர்களான  பெண்மணிகள் பெரும் பேறு பெற்றவர்கள்.

விவேகம் இல்லாதவன் தன்னலத்தையே எப்பொழுதும் கருதுவது போன்று நிர்குண உபாசகர்கள் எல்லா பிராணிகளிடத்தும் ஆத்ம பாவம் கொண்டமையினால் அவற்றின் நலத்தில் கருத்துடையவர்கள்.

“உருவமற்ற பிரம்மத்தை உபாசனை செய்பவர்களுக்கு எங்கும், எதிலும் வேற்றுமை காணும் எண்ணம் கிடையாது. அகில உலகிலும் பிரம்மம் தவிர வேறொன்று இருப்பதாகவே நினைக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு எங்கும் சமமான பாவனையே இருக்கும்.”

Share.

Leave A Reply