மேலும், கிரீடம் தரித்தவராகவும், கதாயுதத்தையும், சக்ராயுதத்தையும் கைகளில் ஏந்தியவராகவும் உள்ள அந்த விஸ்வரூபத்திலே உங்களை தரிசிக்க விரும்புகிறேன்.

ஆகையால், விஸ்வரூபம் கொண்டவரே! ஆயிரக்கணக்கான திருக்கரங்கள் உடையவரே! அதை நான்கு கைகள் கொண்ட சதுர்பூஜனாகத் தரிசனம் அளியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! அனுக்கிரக பூர்வமாய் என்னால் என்னுடைய யோக சக்தியினால் மிகச்சிறந்ததும் ஒளிமயமானதும் எல்லாவற்றிற்கும் முதலானதும், முடிவானதும் ஆன உனக்குக் காட்டப்பட என்னுடைய விராட் விஸ்வரூபம் உன்னைத் தவிர வேறு எவராலும் இதற்கு முன் பார்க்கப்படவில்லை.

உன்னுடைய பக்தியினாலும் வேண்டுகோளினாலும் உன்னிடம் மகிழ்ச்சி அடைந்த நான், உன் மீது கருணை கொண்டு என்னுடைய குணங்கள், பிரபாவங்கள், தத்துவங்கள் உனக்குப் புலப்பட வைக்க வேண்டும் என எண்ணி உலகியலுக்கு  அப்பாற்பட்ட என் விஸ்வரூபத்தை நான் உனக்கு காண்பித்தேன்.

இந்நிலையில் உனக்கு பயமும், துன்பமும், மோகமும் ஏற்பட வேண்டியதில்லை. பின் ஏன் பயத்தினால் இப்படி நடுக்கம் அடைகிறாய் என்கிறார் கிருஷ்ணன்.

“என்னுடைய விஸ்வரூபத் தரிசனம் எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் கிடைக்காது. நானாக எப்போது என்னுடைய யோக சக்தியினால் காண்பிக்கிறேனோ!” அப்பொழுதுதான் இந்த தரிசனம் கிடைக்கும்.

“அதுவும், என்னிடம் இருந்து தெய்வீகப் பார்வை பெற்றவனுக்குத் தான் கிடைக்கும். மற்றவருக்கு அன்று. ஆகவே, இந்த விஸ்வரூப தரிசனம் என்பது கிடைத்தற் கரிய பெரும் பேறு என்று தெரிந்து கொள்.”

“என்னுடைய இந்த ரூபம் மிகவும் உயரியது தெய்வீகமானது. எல்லையற்றது, தெய்வீகப் பேரொளி பெற்றது. எல்லாவற்றையும் உண்டாக்குவது, எல்லாவற்றிற்கும் முதன்மையானது.”

“எல்லையற்று விரிந்தது, எந்தப் புறத்திலும் இதன் முதல், இறுதி காண முடியாது. நீ பார்ப்பது கூட முழுமையான விஸ்வரூபம் அன்று. என்னுடைய பெரும் விஸ்வரூபத்தின் ஒரு பகுதி தான் என்று உணர்ந்து கொள்.

“உன்னைத் தவிர இதற்கு முன் வேறு எவரும் பார்க்கப்படவில்லை. “ யசோதை பாலகிருஷ்ணன் வாயில் பார்த்ததற்கும், கௌரவ மன்றத்தில் பீஷ்மர் முதலானோர் பார்த்ததற்கும், இப்போது அர்ஜுனன் பார்ப்பதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உண்டு.”

“மூன்றும் மூன்று விதமாக வெவ்வேறாக வர்ணிக்கப்பட்டுள்ளன. அர்ச்சுனன் பார்த்த விஸ்வரூபத்தில் பீஷ்மர், துரோணர் முதலானோர் பகவானுடைய கொழுந்து விட்டெரியும் வாயில் நுழைவது காணப்பட்டது. இத்தகைய விஸ்வரூபத்தை இதற்கு முன் யாருக்கும் காண்பிக்கவில்லை. “ என்கிறார் கிருஷ்ணன்.

Share.

Leave A Reply