கேசவா ,முன்பு சொன்ன பிரம்மா கர்மத்திற்கும், இப்போது சொல்லும் வேற்றுமை அற்ற நிலை என்ற யாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை விவரியுங்கள்  என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா ,சில யோகிகள்  தேவ பூஜை  என்னும் யாகத்தையே செவ்வனே செய்கிறார்கள். சிலர் அக்னியில் தானும் பிரம்மமும்  வெவ்வேறு  என்ற பாவனையில் இன்று பூஜை  செய்கிறார்கள் .

பிரம்மா, சிவன், சக்தி ,கணேசன், சூரியன், சந்திரன், இந்திரன் வருணன், வாயு என்று சாஸ்திரங்களில் கூறப்பட்ட தெய்வங்களுக்காக  யாகம் செய்து பூஜை மந்திர  ஜபம் செய்வது, பொருட்தானம் , அன்னதானம் செய்வது கடமை என கருதி ….
பற்று இல்லாமல் பரமாத்மாவை அடைவதே இலட்சியமாகச் செய்து ஆத்மாவில் பரமாத்மா கலந்து ஐக்கியமாகி இருக்கிறார் என்ற முறையில் வணங்குவது ..

இந்த இரண்டு முறைகளிலும் அக்னி  என்ற உருவகத்தில் பரபிரம்மமாகிய  பரமாத்மாவைத் தான்  குறிக்கிறது. எனவே இரண்டிற்கும் வித்யாசம் எதுவும் இல்லை என்று விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா, அடக்கம் என்னும் யாகத்தில் காது முதலிய புலன்களை ‘யாகம் செய்வது’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்.  
அர்ஜுனா ,ஒவ்வொரு புலனையும் தனித்தனியாக அடக்க வேண்டும் ஆதலால் அதை தெளிவுபடுத்தி விளக்குவதற்காக ஒவ்வொரு புலன் அடக்கத்தையும் தனிப்படுத்தி பன்மையில் கூறப்படுகிறது .

காது, கண்கள்,மூக்கு , நாக்கு, மனம்  இவற்றைவசப்படுத்தி சுருக்கிக் கொண்டு சுகம் கவர்ச்சி, பற்று என்ற புத்தி இல்லாமல், போகங்களினால் எந்த தாக்கமும் ஏற்படாமல் தீயினில் எரிந்து சாம்பலாக பொசுங்கிவிடும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
கேசவா, சமாதியோகம்  என்பதையும், புலன்களின் எல்லாச் செயல்களையும் யாகம் செய்வது என்பதினை விளக்குங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா எதை நாம் தியாகம் செய்கிறோமோ அதை மனதில் நிலை நிறுத்துவது தியான யோகம் .

தியான யோகம் இரண்டு வகைப்படும் ஒன்று மூச்சையும் , புலன்களையும் அடக்கி பின் மனதை அடக்குவதாகும் .
மற்றொன்று மனதை முதலில் அடக்கி பின் மற்ற புலன்களை அடக்குவது, இப்படி தியான நிலையில் மூழ்க மனம் ஒரு முனைப்புடன் தியானத்தில் ஒன்றிவிடும், இந்த நிலையே சமாதிநிலை ஆகும்.

தியானயோகத்தில்  மனதை அடக்கிய பிறகு புலன்களின் செய்கைகளான பார்ப்பது , கேட்பது, முகர்வது, தொடுவது, சுவைப்பது , எடுப்பது, விடுவது, பேசுவது, போவது , வருவது மூச்சை உள்ளிழுப்பது, பெருமூச்சு விடுவது   மூச்சு விடுவது போன்ற  செய்கைகள் தாமாகவே ஓய்ந்து போய்விட சமாதியில்  திளைத்து இருப்பது தான் ஆத்மயோகம் என்ற அக்னியில் புலன்களுடைய எல்லாச் செய்கைகளையும் யாகம் செய்வதாகும்  என்கிறார் கிருஷ்ணன் .

கேசவா/ திரவியம் கொண்டு யாகம் செய்வது என்பதினையும் , இந்த யாகம் செய்யும் தகுதி யாருக்கு உள்ளது என்பதினையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா, திரவியம் கொண்டு யாகம் செய்கிறவர்கள் ,சிலர் தவம் என்னும் யாகம்  செய்பவர்கள், மற்றும் சிலர் அஷ்டாங்க  யோக வடிவான யாகம் செய்கிறவர்கள், அகிம்சை முதலிய தீவிரக் கொள்கையோடு கூடிய முயற்சி செய்பவர்கள் ஞானயாகம் செய்பவர்கள் ஆவர்.

மேலும்,, அவர் அவர்களுடைய தர்மத்திற்கு ஏற்றவாறு  நியாயமாக சம்பாதித்த  செல்வத்தை மமகாரம்  , பற்று ,பயன் கருதாது இவற்றைத் துறந்து தத்தம் தகுதிக்கேற்றபடி  உலகத்தின் சேவைக்காகச் செலவழிப்பது …

குளம் கிணறு , கோயில், தர்மசாலை முதலியவை கட்டுவது,பசித்திருப்பவர்கள், அனாதைகள் நோயாளிகள், துயருற்றோர், செயலற்றவர்கள், பிச்சைக்காரர்கள் முதலிய மக்களுக்கு வேண்டிய உணவு உடை, நீர், மருந்து, புத்தகங்கள் முதலிய பொருட்கள் வழங்குவது இல்லறத்தார்களுக்குத்தான் உண்டு.

ஏனெனில் செல்வம் சம்பாதித்து அதைப் பிறர் பொருட்டுச் செலவழிக்கும் பொறுப்பு சந்யாசம்  ஏற்கும் ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு கிடையாது .

பரமாத்மாவை அடையும் நோக்கத்துடன் உலகத்தாரின் சேவைக்காகச் செல்வத்தைச் செலவழிப்பதற்காகத் தன்னலம் கருதாது கர்மம் செய்வது தான் திரவிய யாகம் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .

கேசவா/ அஷ்டாங்க யோகாவை பற்றி விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் .

அர்ஜுனா/ யோகா எட்டுவகைப்படும் .. அவை

1.யமம்
2.நியமம்
3ஆசனம்
4.பிராணாயாமம்
5.பிரத்யாகாரம்
6.தாரணா
7.தியானம்
8 சமாதி

இந்த எட்டும் யோகத்தின் அங்கங்கள் .

முதல் ஐந்தும் வெளிப்படையாக செய்யப்படுபவை பின் மூன்றும் உள்ளத்து சாதனையாகும் இனி ஒவ்வொன்றாக விவரிக்கிறேன்.
1.(யமா)-நல்வினை 
1. அகிம்சை -எந்தப் பிராணிக்கும் எவ்விதத்திலும்  சிறிது கூட தொல்லை கொடுக்காமல் இருப்பது .  
2,சத்யம் – நல்லெண்ணத்துடன்  கபடமில்லாமல் இனிய சொற்களில் உண்மை பேசுவது .
‘3.அத்தேயம் -திருடாமை, எவ்விதத்திலும் பிறருடைய உரிமைகளையும் உடமைகளையும் திருடாமல் இருப்பது. பிறருடைய சொத்தை அபகரிக்காமல் இருப்பது .
4.பிரமச்சாரியம்- மனம் ,வாக்கு உடலினால் எந்த நிலையிலூம்  எவ்விதமான சிற்றின்பங்களையும் நுகராமல் இருப்பது .
5. அபரிமிதம் -உடலைப் பேணுவதற்கு வேண்டியவற்றைத் தவிர பிற போகப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது .
2,(நியமம்)-நியதி 
1.அம்சம்- உள்ளும் ,புறமும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வது .
2.சந்தோசம்-பிரியமானது, பிரியமில்லாதது, சுகம், துக்கம் முதலியவை நேரும் போது எப்பொழுதும் மலர்ந்த முகத்துடன் இருப்பது .
3.தவம்- ஏகாதசி முதலிய விரதங்கள், உபவாசங்களை கடைப்பிடிப்பது .
4.புண்ணியம் – மேன்மைக்கு வழிகாட்டக்கூடிய  நூல்களைக் கற்பது பகவத் நாமம் சொல்வது, பகவத் குணங்களைப் பாடுவது .
5. அர்ப்பணம் -அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பணம் செய்வது. அவர் ஆணைகளை நிறைவேற்றுவதன் வகையில் கடமையைச் செய்வது .
3. ஆசனம் 

இது பலவகைப்படும் அவற்றில் ஆத்மாசனம் செய்ய விரும்புவர் சித்தாசனம், பத்மாசனம் , வஸ்திகாசம் என்ற மூன்றும் உள்ளது .
இதில் எந்த ஆசனமானாலும் முதுகுத் தண்டு , கழுத்து, தலை இவை நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

பார்வை  மூக்கு நுனியில் அல்லது புருவத்தின் மத்தியில்  இருக்க வேண்டும்.

சோம்பல் தாக்காமல் இருந்தால், கண்களை மூடி உட்கார்ந்து கொள்ளலாம். எவருக்கு எந்த ஆசனத்தில் நீண்ட நேரம் சுகமாக அமர முடியுமோ  அந்த ஆசனத்தில் இருப்பது உகந்ததாகும் .

4.பிராணாயாமம் -மூச்சுப்பயிற்சி 
ஆசனம் நிலைத்த பிறகு மூச்சு இழுப்பதையும் விடுவதையும் தடுப்பது . மூச்சுப் பயிற்சி வெளிக்காற்றை உள்ளிழுப்பது , சுவாசம், உள்காற்றை வெளித்தள்ளுவது , பிரன்யவாசம் இவை இரண்டையும் தடுப்பது பிராணாயாமம் .

மூச்சுப்பயிற்சிக்கும் எண், கணக்கு , காலக்கணக்கு இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தடுமாற்றம் ஏற்படக்கூடாது .
நான்கு ஒம்காரங்கள் சொல்ல ஒரு வினாடி நேரம் ஆகும். இப்பயிற்சிக்கு ‘பூரகம் ‘என்று பெயர் .

பதினாறு ஒம்காரங்கள் செய்யும் போது நான்கு வினாடி நேரம் ஆகும் . இப்பயிற்சிக்கு ‘கும்பகம் ‘ என்று பெயர்.

எட்டு ஒம்காரங்கள் செய்யும் போது எட்டு வினாடி நேரம்  ஆகும்  .இப்பயிற்சிக்கு ‘ரேசகம்’ என்று பெயர்.
மந்திரத்தை எண்ணுவதுதான் ‘மந்திரம்’  (மாத்ரா) என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஆகும் நேரம் காலம் எனப்படும் .
சுகமாகவும் சிரமமின்றி மேலே சொன்ன காலத்தையும், மந்திரத்தையும் இரு மடங்கு , மூன்று மடங்கு என முடிந்த வரை வளர்த்துக் கொண்டே போகலாம் .

வெளியிலோ , உள்ளேயோ செளகார்யம் போல மூச்சை நிறுத்தி வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.மூச்சை வெளியே நிறுத்துவதோ , உள்ளே நிறுத்துவதோ என்ற வரையறை இல்லை.

5. பிரத்யாகாரம் 
புலன்கள் தம் போகப் பொருட்களில் இருந்து விலகி ஓய்ந்து போய் சித்தத்திலே அடங்கிவிடும் நிலைக்கு பிரத்யாகாரம் என்று பெயர். ‘

6. தாரணா 
சித்தத்தையே  ஒருகுறிப்பிட்ட விஷயத்தில் வெகுநேரம் நிலைக்க  வைப்பது தாரணாவாகும் .
உள்ளத்திலோ அல்லது வெளியிலோ  ஒரு குறிப்பிட்ட ஒன்றை நிலைநிறுத்தி ஒருமுகப்படுத்துவது தாரணாயாகம் .
இறைவனை மனதில் நினைப்பது, தியானம் செய்வது, சமாதி நிலையில் அமர்வது இவை அனைத்தும் தாரண நிலைகள் ஆகும்.

7. தியானம் 
தாரண முக்தியே  தியானமாகும். மனதிற்குப் பிடித்த இறைவனை மனதில் நிறுத்தித் தொடர்ந்து முனைப்புடன் வெகுநேரம் உறைய வைப்பது தியானமாகும் .

8.சமாதி 
தியானம் செய்யும் போது தியானிக்கப்படுகிற உருவம்தான் தெரிகிறதே தவிர தாம் தியானம் செய்கிறோம் என்ற உணர்ச்சியும் மறைந்து போய் இறைவன் மட்டுமே தெரிகிறார் என்ற நிலையே சமாதி நிலை .

தியானம் தொடரத் தொடர யோகின் மனம் தியானிக்கும் பொருளாகவே முழுமை பெற்றுவிடும் .தன்னையே இழந்து பரமாத்மாவில் ஒன்றி பரமாத்மா தவிர தான் என்ற அறிவே இல்லாத நிலையே சமாதியாகும் என யோக நிலைகளை விளக்குகிறார் கிருஷ்ணன் .
                                                 தொடரும் .

Share.

Leave A Reply