கேசவா! என்னிடம் உயர்ந்த பிரியமான பக்தி கொண்ட பக்தர்களிடத்தில் உபதேசத்தைச் செய்ய வேண்டும் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! ஒருவன் தானாகவே பகவானிடம் நம்பிக்கை கொண்டு திருநாமங்கள், கல்யாண குணங்கள், லீலைகள், பிரபாவம், சுயரூபம் இவற்றை நினைத்த அளவிலேயே அவருடைய புத்தியில் மனம் உருகி பகவானுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே…
கீதா சாஸ்திரத்தைப் பற்றி விரிவுரை ஆற்ற வேண்டும். அவற்றை விளக்கிப் பொருள் கூற வேண்டும். சரியாக புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
அவற்றின் கருத்துக்களை நயம்பட உரைக்க வேண்டும். கேட்பவர்களின் ஐயங்களை தீர்க்க வேண்டும். கீதையின் உபதேசங்களை அவர்கள் உள்ளத்தில் பதிய வைக்க வேண்டும்.
கீதையின் உபதேசத்தின் படி வாழ்க்கை நடத்துவதற்குரிய மன உறுதியை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் இவை யாவும் பகவானிடம் பரம பிரியம் பூண்டு பகவானுடைய பக்தர்களிடையே கீதை உபதேசத்தை கூறுவதாகும்.
இவ்வாறு என்னிடம் பக்தி செய்ய வேண்டும். என்ற ஒரே குறிக்கோளுடன் எனது பக்தர்களிடம் கீதையை விளக்கி பிரச்சாரம் செய்பவர் என்னையே அடைவார். இதில் சிறிது கூட சந்தேகமில்லை என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! அந்த பக்தனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமான காரியத்தைச் செய்யக் கூடியவன் மனிதர்களில் எவனும் இல்லை.
அப்படியே பூமியில் அவனைக் காட்டிலும் எனக்கு மிகவும் பிரியமானவன் வேறொருவன் இருக்கப் போவதும் இல்லை என்கிறார்.
அதாவது, கீதா சாஸ்திரத்தின் மர்மம் அறிந்த, மிகுந்த சிரத்தை உள்ள பிரியம் கொண்ட பகவத் பக்தரைக் குறிக்கிறது.
யாகம், தானம், தவம், சேவை, பூஜை, ஜபம், தியானம் ஆகியவை அனைத்துமே எனக்கு பிரியமான காரியங்கள் தாம். என் கருத்துக்களை என் பக்தர்களிடையே விளக்குவது இவை அனைத்திலும் மேலானது.
இச்செயலுக்கு நிகராக நான் உய்விக்கும் செயல் உலகில் வேறொன்றும் கிடையாது. இக்காரணத்தினால் என் கருத்துக்களை சிரத்தையுடனும், பக்தியுடனும், பக்தர்கள் இடையே விளக்குகிற, என்னிடம் பிரியம் கொண்ட பக்தரே எனக்கு அனைவரிலும் இனியவர்.
அவரிலும் இனியவர் வேறொருவர் இல்லை. ஏனெனில், அவர் தன்னலத்தை அறவே துறந்து நான் உய்விக்கும் காரியத்தை மட்டுமே செய்கிறார். ஆகவே, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர் என்கிறார் கிருஷ்ணன்.
என்னை அடைவதற்கான சாதனங்கள் அனைத்திலும் சிறந்தது “பக்தியுடன் என் பக்தர்கள் இடையே இந்த கீதா சாஸ்திரத்தைப் பரப்புவது தான்.” இதை நன்கு புரிந்து கொண்டு என் பக்தர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
எந்த மனிதன் இந்த தர்மமயமான நம் இருவருடைய உரையாடலான கீதா சாஸ்திரத்தை கற்பானோ அவனாலும் நான் ஞான வேள்வினால் வழிபட்டவனாக ஆவேன். என்பது என்னுடைய கருத்து என்கிறார்.
அர்ச்சுனா! இந்த கீதா சாஸ்திரத்தை சிரத்தை உடன் கேட்பதற்குக் கூட சுவை இல்லாத உள்ளம் படைத்தவன் மனிதன் என்று கூறத் தக்கவன் அல்லன்.
அவன் பெற்ற மனிதப் பிறவி வீணே ஆகும். அவன் மனித உருவத்தில் உயிர் வாழும் விலங்கு ஆவான். கீதையைக் கற்கும் சுவை படைத்தவன். ‘நா’ மனிதன் என்கிறது என்கிறார்.