கேசவா! அஞ்ஞானத்தினால் உண்டான உன் மோகம் அழிந்ததா? என்று கேட்பதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! நீ கவனமாகக் கேட்டிருந்தால் அதற்கு நிச்சயம் பயன் உண்டு. நீ மோகத்திற்கு ஆட்பட்டு தர்மம் இன்னது என்று தெரியாமல் குழம்பி இருக்கிறேன் என்று சொன்னாயே!

உனக்கு விதிக்கப்பட்ட கடமையை ஆற்றுவது பாவம் என்று கருதினாயே! செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் செய்யாமல் விட்டுவிட்டுப் பிட்சை எடுத்து பிழைப்பேன். அதுவே, சிறந்த வழி என்று சொன்னாயே!

அந்த மோகத்தின் காரணமாகச் சுற்றத்தைக் கொல்ல வேண்டுமே! என்று பயந்து கலங்கினாயே! நான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்க முடியவில்லையே! என்று கலங்கினாயே!

இப்படி உன்னுடைய அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட மோகம் எல்லாம் அழிந்து விட்டதா? இல்லையா?

என்னுடைய உபதேசத்தைக் கவனமாகக் கேட்டிருந்தாய் ஆனால் அந்த மோகம் அழிந்திருக்க வேண்டுமே! அந்த மோகம் இன்னும் அழியவில்லை ஆனால், நீ உபதேசத்தை ஒரு முனைப்புடன் கேட்கவில்லை என்கிறார் கிருஷ்ணன்.

அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட மோகம் அழியவில்லை என்றால் நாம் இன்னும் கீதா சாஸ்திரத்தைச் சரிவரக் கற்கவில்லை என்று உணர வேண்டும்.

மறுபடியும் சிரத்தையுடனும், விவேகத்துடனும் கீதையின் கருத்துக்களைச் சிந்தித்து அறிய வேண்டும் என்கிறார்.

அச்சுதா! “உங்கள் அருளால் எனது மோகம் அழிந்தது. மேலும் என்னால் ஞான ஒளி பெறப்பட்டது. இப்பொழுது நான் சந்தேகம் மற்றவனாக உறுதியாக இருக்கிறேன். ஆகையால் உங்கள் ஆணையை நிறைவேற்றுவேன்.” என்கிறார் அர்ச்சுனன்.

அஞ்ஞானத்தினால் ஏற்பட்ட மோகம் அழிந்தவுடன் எனது உள்ளத்தில் தெய்வீக ஞானத்தின் ஒளி வீசுகிறது.

அதனால், எனக்கு உங்களுடைய குணங்கள், பிரபாவங்கள், ஆளுமை, சுயரூபம் பற்றிய முழுமையான ஞானம் ஏற்பட்டுவிட்டது. உங்கள் விஸ்வரூபத்தை நேராக கண்டபோது கிடைத்து விட்டது. நான் அறிந்து கொள்ள வேண்டியது இனி ஒன்றும் இல்லை.

தர்மம் எது, அதர்மம் எது, செய்ய வேண்டியது என்ன, செய்யத் தகாதது என்ன என்ற விசயங்களில் எனக்குச் சிறிது கூட ஐயமில்லை. எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டன. என் மனம் சஞ்சலம் நீங்கித் தெளிவாகி விட்டது.

Share.

Leave A Reply