ஐந்தாம் அத்தியாயம்-தொடர்ச்சி
கர்ம சன்யாச யோகம்
கேசவா/ பிராண, அபான வாயுக்களைச் சீராக வைப்பது எவ்வாறு என விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா /பிராண, அபான வாயுக்களின் போக்கு இயல்பாகவே தாறுமாறாக இருக்கும்.அவற்றை சீராக இருக்கச் செய்தால் சஞ்சலம் அமைதியின்மை தாமே அழிந்து விடும்.அவன் இயல்பாக பகவானை தியானம் பண்ணுவான்.
பிராண , அபான வாயுக்களை சமப்படுத்துவதற்கு வழி முதலில் இடது நாசி மூலம் அபான வாயுவை உள்ளே இழுத்து வலது நாசி மூலம் பிராண வாயுவை வெளியே தள்ள வேண்டும்.
பிறகு, அபான வாயுவை வலது நாசி மூலம் உள்ளே இழுத்து பிராண வாயுக்களைச் சீராக்கும் பயிற்சி செய்யும்போது பகவத் நாமத்தை ஜபம் செய்ய வேண்டும்.
வாயுவை வெளிப்படுத்தும் போதும் உள்ளிழுக்கும் போதும் சரியான சீரான ஒரே விநாடிக் கணக்கில் செய்வதுடன் அந்தப் போக்குவரத்தை சமமாகவும், கொஞ்சம் .,கொஞ்சமாக நுட்பமாகவும் செய்ய வேண்டும்.
மூச்சுவிடுவதும், உள்ளிழுப்பதும் சமமாகவும் அமைதியாகவும் நுட்பமாகவும் ஆகிவிடும்போது மூச்சு வெளியிலே செல்வதோ உள்ளே வருவதோ கூடத் தெரியாது.இதுதான் பிராணனும், அபானனும் சமமாகவும் நுட்பமாகவும் செல்கின்றன என்பதற்கு அடையாளம் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
கேசவா/ புலன்கள், மனம் , புத்தி இவற்றை அடக்குவது என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ புலன்கள் தம்போக்கில் போக விசயங்களில் அலைந்தாலும் மனம் அலைந்து கொண்டே தன் வழக்கத்தை விடாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டிருந்தாலும்.,….
புத்தி ஒருவிதமான முடிவுக்கு வராமல் பேதலித்தாலும் கட்டுப் பாடற்றுக் கண்டபடி திரிகின்றன என்று பொருள்.
விவேகத்துடனும் வைராக்கியத்துடனும் பயிற்சி செய்து கட்டுக்குள் வசப்படுத்திச் சொன்னபடி நடக்கச்செய்வது உள்நோக்கமாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
கேசவா/ ‘ஏவ’என்ற சொல்லின் பொருளையும் , ‘எப்போதும் அவன் முக்தன்தான்’ ,”விடுதலை பெற்றவனே” என்பதன் கருத்தையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ ‘ஏவ’ என்பது உறுதியை வெளியிடுவதாகும்.எந்த மனிதன் அவா, பயம், குரோதம் இவை சிறிதும் அற்று விளங்குகிறானோ அவன் மேலே கூறிய தியானம் செய்யும் போதும், நடைமுறையிலும், உடல் உள்ள போதும், போன பின்பும் விடுதலை பெற்றுப் பரமாத்மாவை அடைந்தவனே .இதில் ஐயம் என்பது இல்லை என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
மேலும் கூறுகிறார். அர்ஜுனா/ என் பக்தன் என்னை எல்லா யாகங்களையும் , தவங்களையும் ஏற்பவன் என்றும் அகிலலோக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன் என்றும் அகில சராசர பிராணிகளுக்கும் உற்ற நண்பன்.
தன்னலம் கருதாத அன்பும், அருளும் உடையவன் என்றும் தத்துவரீதியாக அறிந்து மேலான அமைதியை அடைகிறான் எனக் கூறுகிறார் கிருஷ்ணன் .
கேசவா, ‘தவம்’ என்றால் என்ன? பகவான் அதை ஏற்கிறார் என்றால் என்ன பொருள் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ அகிம்சை, சத்யம் முதலிய நற்பண்புகள் மேற்கொண்டு தாய், தந்தை பெரியோர்களை வணங்கி பணிவிடை செய்வது ,
ஏழை , எளியவர்களுக்கும் , சேவை செய்யும் நற்பண்பை வளர்த்துக் கொண்டால் அது இறைவனுக்குச் செய்யும் சேவையாகும் .
இதை உணர்ந்து கொண்டால் எல்லோர் உள்ளத்திலும் ஆத்மவடிவாக பகவானைக் காண்கிறான் .
ஒருவனோ , ஒருத்தியோ யாரிடமாவது பெருமையும், அன்பும் பெற்றுவிட்டால் அவர்களுக்கு சேவை செய்வதற்காக ஒவ்வொரு கணமும் புதிது புதிதாக உற்சாகம் மேலிட்டுக் கொண்டே இருக்குமல்லவா?
எவ்வளவு பணிவிடை செய்தாலும் இவ்வளவு குறைவாகத்தானே என்னால் செய்ய முடிகிறது என்ற எண்ணம்தான் அவர்கள் மனதில் தோன்றும் .
”நாம் செய்வது அவர்களுக்கு உபகாரம் என்று நினைத்துக் கவலைப்பட மாட்டார்கள்.இப்படி சேவை செய்ய சந்தர்ப்பம் கிடைத்ததே பெரிய பாக்கியம் என்று மகிழ்வார்கள் .
இப்படி சேவை செய்யச் செய்ய மனதில் பணிவும், உண்மையான வணக்கமும், வளரும் கொஞ்சம் அயர்ந்தாலும் நமக்கு இந்த பாக்கியம் நழுவிவிடுமோ என்று பயப்படுவார்கள் .
இப்படி சேவை செய்வதன் மூலம் அவர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் ஏற்படுவதால் அவர்கள் சேவை செய்கிறார்கள்.
சேவை செய்வதில் அலுப்பு அடைவதில்லை.ஏனெனில் அவர்கள் உள்ளம் எப்பொழுதும் ஆனந்தக் கடலில் மூழ்கித் தளும்பிக் கொண்டு இருக்கும். இந்த ஆனந்தத்தில் இருந்து கரை ஏறாமல் மேலும், சேவை சேவை செய்யவே விழைவார்கள் .
இப்படி உலகியல் மரியாதை, பெருமை, பிரேமை என்னும் நோக்கில் சேவை செய்வதிலேயே இவ்வளவு உண்மையான ஈடுபாடும் அமைதியும் ஏற்படுமானால் …
அகில உலகிலும் பகவானையே போற்றத்தக்கவராக தேவாதி தேவனான சர்வ வல்லமை படைத்தவராக சிந்தனைக்கு அப்பாற்பட்ட பிரபாவங்களின் கொள்கலனாக தன் பேரன்புக்கு உரியவராக உணர்ந்து அவரது தூய , இனிய அமுதமான பக்தி பெருக்கில் முழுவதும் மூழ்கிய பகவானுடைய பக்தன் தன் உயர்ந்த தொண்டுள்ளத்துடன் உறுதியான நம்பிக்கையுடனும் வழிபட்டால்….
அவனுக்கு உலகியல் கடந்த எத்தகைய உயர்ந்த அபூர்வமான தெய்வீகமான மனஅமைதி கிடைக்கும்.
இதை யாரும் விளக்க முடியாது .பகவானுடைய திருவருளால் இத்தகைய பேறு பெற்றவனே உண்மையில் இதை உணரமுடியும் என விளக்குகிறார் கிருஷ்ணன்.
கேசவா/ அகில உலக நாயகர்களுக்கும் மேலான ஈசுவரன்அறிவதையும், அறிந்தவர்களுக்கு அமைதி கிடைப்பதையும் விவரியுங்கள் என்கிறான் கிருஷ்ணன்.
அர்ஜுனா/ இந்திரன் , வருணன் , குபேரன் , யமன் முதலிய லோக நாயகர்கள் எல்லோருக்கும் ஈசுவரர்களுக்கு எல்லாம் ஈசுவரனான பகவான்… .
லீலையாகப் பல கோடி பிரமாண்டங்களைப் படைத்துக் காத்துத் தன்னுள் அடக்கித் தக்கபடி கட்டுப்பாட்டில் படைத்தவர் எல்லாவற்றையும் அடக்கி ஆள்பவர்….
எல்லாவற்றிற்கும் தலைவர் எல்லா ஈசுவரர்களுக்கும் ஈசுவரனே அகில உலக நாயகன் ஆவான் என்பதை உணர்ந்து கொண்ட பக்தன் பகவானுடைய அளவற்ற பிரபாவத்தையும், ரகசியத்தையும் நன்கு உணர்ந்து விட்டபடியால் ஒருகணம் கூட பகவானை மறக்க மாட்டான்.
அவனுக்கு ஒரு போதும் , பயம், வேறு சிந்தனைகள் இருக்காது .அவனுடைய அமைதியைக் கெடுக்க காமகுரோதங்கள் முதலிய பகைகள் அவனை அணுகமாட்டாது .
அவனுடைய பார்வையில் பகவானைக் காட்டிலும் பெரியவர் கிடையாது. அந்தச் சிந்தனையில் ஈடுபட்டு இடைவிடாமல் எப்போதும் மேலான அமைதியின் இருப்பிடமாகவும், ஆனந்தத்தின் பெருங்கடலாகவும் உள்ள பகவானின் தியானத்திலேயே மூழ்கி இருப்பான் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
கேசவா/ பகவான் எல்லா பிராணிகளுக்கும் உற்ற நண்பனாக இருப்பதையும் அதை எப்படி அறிவது என்பதையும் விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் .
அர்ஜுனா/ அகில உலகிலும் பகவானுக்குக் கிடைக்காத பொருள் ஒன்றும் இல்லை. எதைப் பெறுவதாக இருந்தாலும் யாரையும் எதிர்பார்க்கத் தேவையில்லை
அருள் வடிவான காரணத்தினால் அருள் புரிந்து நன்மை செய்கிறார்.அடிக்கடி அவதாரம் எடுத்துப் பலவிதமான விசித்திரமான லீலைகளைச் செய்வதால்…
அவற்றைப் பாடிப் பாடி மக்கள் கரையேறி இருக்கிறார்கள். அவருடைய ஒவ்வொரு செயலிலும் உலக நன்மையே நிறைந்து இருக்கிறது.
அவதாரத்தில் யாரையாவது கொன்றாலும் அல்லது யாருக்காவது தண்டனை கொடுத்தாலும் அதுவும் அவருடைய அருள்தான் இரக்கமும், அன்பும் இல்லாத எந்த ஒரு சட்டமும் அவரிடம் இல்லை. ஆகவே, எல்லா உயிரினங்களுக்கும் உற்ற நண்பனாக விளங்குகிறார் என விவரித்தவர்..
உலகத்தினர் இவ்வுண்மையை அறியாததாலேயே உலகியலில் நல்லது கெட்டது நேர்ந்தாலும் சுக, துக்கமடைகிறார்கள், அதனால்தான் அவர்களுக்கு அமைதி கிடைப்பதில்லை .
இந்த உண்மையை அறிந்தவன்,”நம்மிடம் காரணமற்ற பேரன்பு உள்ளதால் அவர் எது செய்தாலும் அது நம்முடைய நன்மைக்குத்தான் என்ற மன நிலையில் எந்த நிலையிலும் , எந்த நேரத்திலும் தனிப் பெருங்கருணையாளராகிய பகவானுடைய லீலை, கருணையும் கூடிய மங்களகரமான அருட்செயல்தான் என்று நம்பிக்கையோடு எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
அதனால் அவனுக்கு நிலையான அமைதி கிடைக்கிறது.அந்த சாந்திக்கு இடையூறாக எதுவும் அவனுக்கு நேரமுடியாது .
உலகத்தில் வாழும் சாதாரண மனிதனிடம் ஓர் உயர் அதிகாரியோ அல்லது அரசனோ நட்பு காட்டி உயர்த்த விரும்புவதை அறிந்த அந்த மனிதன் நினைக்கிறான் .
செல்வாக்கும், சக்தியும் படைத்த அரசன் உண்மையான அன்புடன் நட்பு கொண்டது தனது பாக்கியம் எனக்கருதி கவலை எல்லாம் மறந்து ஆனந்தத்தில் மூழ்கி விடுகிறான்.
சாதாரண மனிதனிடம் அரசன் காட்டிய நட்புக்கே இவ்வளவு ஆனந்தம் கிடைக்கும் போது பரம்பொருளாகிய பகவானே உற்ற நண்பன் எனக்கருதி நம்பிக்கை வைத்தால்….
பகவானுடைய அருள் மழை பொழிவால் பேரருள் பெற்று வெகுவிரைவில் பகவானுடைய சுயரூபம், பிரபாவம், தத்வம் கல்யாண குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்து பூரணமான அமைதியைப் பெறுவான்.
தேவதைகளும் , மகரிஷிகளும் கொண்டாடும் பகவான் அகில உலக நாயகன், ஈசுவரர்களுக்கு எல்லாம் ஈசுவரன் என்னிடம் பேரன்பு கொண்ட நண்பர் என எண்ணும்போதே…
அற்பர்களிலும் அற்பமான தூசு போன்ற நான் எங்கே/ எல்லையற்ற கற்பனைக்கெட்டாத மகேசுவரன் எங்கே /
என்னைக் காட்டிலும் பேறு பெற்றவர் யார் ? என எண்ணும்போதே நன்றியுணர்வுடன் ஆனந்தப் பெருங்கடலில் மூழ்கி ஈசனின் புனிதத் திருவடிகளில் எப்போதும் திளைத்திருக்க முற்படுவான் என விவரிக்கிறார் கிருஷ்ணன் .
ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது
தொடரும்