இறைவனை ஏன் வழிபட வேண்டும்? அதனால்  நமக்கு என்ன பயன் என சில சமயங்களில் மனம் நினைக்கலாம்.


இரவும் பகலும் எப்படி மாறி வருகிறதோ…அதுபோல் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்பமும்,துன்மும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல் வரத்தான் செய்யும்.

துன்பமே இல்லாத மனிதான் இவ்வகையத்தில் இல்லை. துன்பத்தை வெல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும். மனதைக் கட்டுப்படுத்தி ஆள்வதே துன்பத்தை வெல்லும் தாரக மந்திரம்.
எத்தனை தொல்லைகள் தொடர்ந்து வந்தாலும், கலங்காது எதிர்க்கும் ஆற்றல் உள்ள மனதை தருவதற்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.


சுயகட்டுப்பாட்டையும் ,மனக்கட்டுப்பாட்டையும் அளிக்க வல்ல சிறந்த இடம் தான் கோவில். சாதாரணமாக தமக்காகவோ, பிறர்க்காகவோ வேண்டி வணங்கும் போது அதற்கான பலன் கிடைக்கத்தான் செய்கிறது.

அப்படி இருக்க இறைவன் மேல் முழு அன்பும், பக்தியும் செலுத்தி மனதை ஒருமுகப்படுத்தி வழிபாடும் போது, துன்பத்தை வெல்லும் ஆற்றல் பெற்று வாழ்க்கையை இனிமையாகவும்,இன்பமாகவும் நேசிக்கும் பக்குவத்தை பெறுவதுடன் இறைவனை வழிபட்ட திருப்தியும் கிடைக்கும்.
இறைவனாவது, திருப்தியாவது என கேட்பவரும் உண்டு. பாற்கடலைக் கடைந்து எடுக்கும் போது அமிர்தமும் வந்தது. நஞ்சும் வந்தது.
அது போலத்தான் ஒன்றை நினைக்கும் போது வேண்டாத மற்றொன்றும் ஒட்டிக்கொள்ளும்.

எது வேண்டுமோ,அதை மட்டும் பிரித்து பகுத்து உணரும் ஆற்றல் கொடுப்பது பயிற்சிதான். கடலை கடையும் போதுதான் அமிர்தம் கிடைத்தது.தயிரை கடையும் போது தான் வெண்ணை கிடைக்கிறது. அவ்வாறே நம் மனதை சோதனை என்னும் மத்தால் கடைந்து நல்வழிப் படுத்துகிறார். இறைவனை அடைவதற்கு மேலோட்டமான பக்தியால் அடைய முடியாது.அவனை சரணாகதி அடையும் போது தான் உனக்குள்ளேயே இருக்கிறேன் என வருவான்.

அப்போது பட்ட சோதனைகள் வேதனைகள் எல்லாம் மாயமாய் மறைந்து பரவசநிலை அடையும் மார்க்கத்தை தருவான். வீட்டில் கொலு வைத்திருக்கும் போது அகமும்,புறமும் சுத்தமாக வைத்து பூஜைகள் செய்து வழிபடுகிறோம். இறைவன் இருக்கும் மனமாகிய பீடத்தில் கூடாத ஆசைகளைப் பரப்பி குப்பை மேடாக்கி வைத்திருந்தால் எப்படி இறைவன் இருப்பான்.
நாம் செய்யும் பாவங்களை அகற்றி நம்மை புனிதனாக்க வேண்டும் அல்லவா ? சித்தர்கள்,யோகிகள் தவத்தால் தான் இறைவனை அடைந்து அற்புத ஆற்றல் பெற்று நோயற்ற வாழ்க்கை வாழ்ந்து சமாதி ஆகியிருக்கிறார்கள்.
‘தியானம்’ என்பதை நமது மூதாதைகள் ‘தவம்’ ,’விரதம்’ என்ற வழியில் கற்றுத்தந்த ஒரு பயிற்சி தான்.அதை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கும் போது துன்பத்தை வென்று இன்பத்தை அடையும் வழி தென்படும். 
இறைவழி பாட்டால் இறைவனை அடைந்த சிவன் அடியவராகிய கோச்செங்கட்சோழர் வரலாற்றைப் பார்ப்போம்.
சோழ நாட்டில் காவிரிக் கரையிலே சந்திர தீர்த்தம் இருந்தது.அதன் அருகே ஓர் அழகிய வனம் இருந்தது. அவ்வனத்தில் ஒரு வெண்ணாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது.அது ஒரு வெள்ளை யானைக்கு புலப்பட்டது.அச்சிவலிங்கத்தைக் கண்ட வெள்ளை யானை பூஜை செய்ய எண்ணியது,.துதிக்கையால் நீரை முகந்து கொண்டு வந்து சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தது.
வனத்தில் உள்ளமலர்களைப் பறித்து சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்யும்.இவ்வாறு நாள்தோறும் சிவலிங்கப் பெருமானை வழிபட்டு வந்தது யானை. அங்கே ஞானஉணர்வுடைய ஒரு சிலந்தியும் இருந்தது. சிவலிங்கத்தின் மீது சருகு உதிர்வதை கண்டது சிலந்தி.அதை தடுக்கும் பொருட்டு தனது வாயால் சிலந்தி வலை பின்னி மேற்கட்டி அமைத்தது. மறுநாள் பூசைக்கு வந்த வெள்ளை யானை மேற்கட்டியைக் கண்டது. இறைவனுக்கு மேல் இப்படி இருப்பது தகாது என்று எண்ணிய யானை அதனை அழித்தது,.சிலந்தி அதைப் பார்த்து,"துதிக்கை சுழன்றமையால் மேற்கட்டி அழிந்தது போலும் "என்று கருதிற்று.
மீண்டும் மேற்கட்டு அமைத்தது. அடுத்த நாள் வந்த யானை மேற்கட்டை அழித்தது. சிலந்திக்குச் சினம் மூண்டது. அது கோபத்தில் எழுந்து யானையின் துதிக்கையுள் புகுந்து கடித்து…கடித்து துன்புறுத்தியது. யானை கீழே விழுந்தது,தும்பிக்கையை நிலத்தில் மோதி, மோதி இறந்தது.சிலந்தியும் மாண்டது. சிவபெருமான் யானைக்குச் சிவகதி அருளினார்.அவ்விடமே திருவானைக்கா என்று அழைக்கப்படுகிறது.

சோழர் குலத்தில் பிறக்கும் படி சிலந்திக்கு அருள் செய்தார். சுபதேவர் என்னும் ஒரு சோழ மன்னர் இருந்தார்.அவர் தம் மனைவியார் கமலவதியார். இருவரும் தில்லைக்குச் சென்று ஆண்டவனை வழிபட்டுக் கொண்டு இருந்தனர். கமலவதியார்க்குப் புத்திரப் பாக்கியம் இல்லாமல் இருந்தது.பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்பதற்காக  தில்லைக் கூத்தனைப் போற்றுவது வழக்கம்.
தில்லைக் கூத்தன் திருவருளால் அம்மையார் கருவுற்றார்.அக்கருவில் திருவானைக்காச்  சிலந்தியின் ஆருயிர் சேர்ந்தது. கமலவதியார் கரு உயிர்க்கும் நேரம் வந்தது.’பிள்ளை இப்போது பிறத்தல் கூடாது.இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்குமாயின் இக்குழந்தை மூன்று  லோகத்தையும் ஆள்வதாகும்.,என்று கால ஜோதிடர் சொன்னார். 
"அவ்வுரை கேட்ட கமலவதியார் அப்படியானால் என்னைத் தலைகீழாகக் கட்டுங்கள் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.ஒரு நாழிகை கழிந்தது,பிள்ளை பிறந்தது.காலந்தாழ்த்திப் பிறந்தமையால்குழந்தை சிவந்த கண்களை உடையதாய் இருந்தது.
அதைக் கண்ட அன்னையார் ,"என்கோ செங்கண்ணனோ" என்று சொல்லிய மறுநிமிடமே உயிர் பிரிந்தது. கோச்செங்கட்  என பெயர் சூட்டி சுபதேவர் பிள்ளையை வளர்த்தார்.தக்க வயதில் பிள்ளைக்கு முடிசூட்டிவிட்டு தவநெறியில் நின்று சிவனடி சேர்ந்தார்.


கோச்செங்கட்  சோழருக்கு முன்னை உணர்வு முகிழ்ந்திருந்தது.அவர் திருக்கோவில்கள் கட்டுவதில் கண்ணுங் கருத்தும் உடையவராய் இருந்தார். தாம் முன்னே திருவருள் பெற்ற திருவானைக்காவினை நாடிச் சென்றார்.அங்கே திருக்கோவில் அமைத்தார்.

அமைச்சரைக் கொண்டு சோழ நாட்டிலே பல திருக்கோவில் கட்டுவித்தார்.அவைகளுக்குச் கட்டளைகளும் முறைப்படி அமைக்கப்பட்டன.
கோச்செங்கட் சோழ நாயனார் தில்லை சென்று தில்லைக் கூத்தனை வழிபட்டார்.தில்லை வாழ் அந்தணர்க்கு மாளிகைகள் கட்டிக் கொடுத்தார்.இவ்வாறு பல திருத்தொண்டுகள் செய்து சிவன் திருவடி சேர்ந்தார்.
Share.

Leave A Reply